சென்னை: ஒன்றிய அரசு வழங்கும் 29 பைசாவை வைத்துத் தான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர் என வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மயிலாப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஏப்.06) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
திறந்தவெளி வாகனத்தில் மக்களிடையே பேசிய கமல்ஹாசன், “இங்குப் பறந்து கொண்டிருக்கும் அத்தனை கொடிகளும், ஒரு கோடி பறப்பதற்காகப் பறந்து கொண்டிருக்கிறது, அது நம் தேசியக்கொடி. நம் ஜனநாயகத்தின் அடையாளமாக ஒரு கொடி பறந்தே ஆக வேண்டும், அதற்காக இத்தனை கொடிகளும் பறந்து கொண்டிருக்கிறது.
ஆளை அடிக்க முடியாது, ஆனால் அவர்களுடைய சித்தாந்தத்தை அடிக்கலாம்: தமிழச்சி தங்கபாண்டியனின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது. நாடு முழுவதும் இது போன்ற குரல் ஒலிக்க வேண்டும். இவரது கரோனா கால செயல்பாடுகள் பலரால் பாராட்டப்பட்டது. வலிமை தமிழச்சி என்ற முகாமை நடத்திப் பல பெண்களின் மேம்பாட்டுக்கு எல்லா உதவிகளையும் செய்துள்ளார்.
குஜராத் மாடல் தான் சிறப்பு, திராவிட மாடல் எல்லாம் ஒன்றுமில்லை என இனிமேலும் சொல்ல முடியாது. அந்தப் பொய்க்கு அற்புதமான மலர் வளையம் வைத்துள்ளார் முதல்வர். அதுவும் தாமரைப் பூக்களால் ஆன மலர் வளையம்.
என்னுடைய நாயகன் திரைப்படத்தில் ‘அடித்தால் தான் அடியிலிருந்து தப்ப முடியும்’ என்ற ஒரு வசனம் வரும், அதுபோல ஜனநாயக நாட்டில் ஆளை அடிக்க முடியாது, ஆனால் அவர்களுடைய சித்தாந்தத்தை அடிக்கலாம். அப்படித் திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஜனநாயக தேரை இழுக்க வேண்டியது எனது கடமை: வறுமையைத் திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார், கல்வியின்மை, வேலைவாய்ப்பின்மையை அடித்துக் கொண்டிருக்கிறார், முக்கியமாகச் சர்வாதிகாரத்தைத் திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார். அதனாலே என்னைப் போன்ற ஆட்கள் இங்கு வந்து நிற்கிறோம். நீங்கள் அவர்களை விமர்சனம் செய்தீர்களே என கேட்டால் விமர்சனம் செய்வது எனது கடமை, ஏன் உங்களது கடமையும், ஆபத்தென்று வரும் போது ஜனநாயக தேரை இழுக்க வேண்டியது எனது கடமை, நமது கடமை.
உங்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பத்தாது தான், ஆனால் அங்கு ஒருத்தர் ஒருவருக்கு ஆயிரம் கோடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்குக் கோடி பேருக்கு ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒருவருக்கு ஆயிரம் கோடியைக் கொடுக்கும் மேஜிக்கை இந்த தெருவிலும் காட்டலாமே? இங்கு ஒரு லட்சம் பேர் கோடீஸ்வரர் ஆவார்கள்.
அந்த 29 பைசாவை வைத்துத் தான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்: நாம் கொடுக்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவைத் திருப்பிக் கொடுக்கின்றனர், ஆனால் அந்த 29 பைசாவை வைத்துத் தான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை இந்தியாவில் வேறு எங்கும் செயல்படுத்தவில்லை, செய்தால் இந்தியாவே மேம்படும். பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து என்ற திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வந்தால் எப்படி இருக்கும், ஆனால் அதைச் செய்யவில்லையே.
எனவே இனி இந்தியா பின் தொடர வேண்டியது திராவிட மாடலை தான், நம்மை விட அதிகமாக வரி பெறும் மாநிலங்களிலும் நிலைமை சரியில்லை, அங்குள்ளவர்கள் வேலை இல்லாமல் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். கடந்த பத்து வருடத்தில் மீனவர்களுக்காக என்ன செய்தார் மோடி? இங்கிருந்து படகுகள் செல்வதும், அதனை மீட்டு வருவதும் நடந்து வருகிறது.
ஆனால், இந்த பத்து வருடத்தில் அவ்வளவு மீனவர்களின் கைதுகள் நடைபெற்றுள்ளது. ஏழை மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. நேரு என்ன செய்தார் என கேட்கலாம், தன்னுடைய சொத்தை எல்லாம் எழுதிக் கொடுத்து 15 வருடங்கள் சிறைச்சாலை சென்றவர் அவர். ஆனால் நீங்கள் நம் சொத்தை எல்லாம் ஒருவருக்கு எழுதி வைக்க நினைக்கிறீர்கள், அதனை ஏற்க முடியாது. ஏழ்மையிலிருந்து ஏன் விடுவிக்க முடியாது, ஏழ்மை நிரந்தரமானது அல்ல, அதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இத்தனை கொடிகள் பறப்பது தேசியக்கொடிக்காக: உங்களது உழைப்பையும், வேர்வையையும் தூக்கி எறிந்தால், ஒரு பணக்காரனாவது மூழ்காமல் இருக்க மாட்டான். அவ்வளவு பலம் இருக்கிறது உங்கள் உழைப்பிற்கு. இப்படி இருக்கையில், தொடர்ந்து சாதியின் வாயிலாக, மதத்தின் வாயிலாகப் பிரச்சனையை ஏற்படுத்துவதைத் தொடர்ந்து தனது பணியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நான் தென் சென்னை தொகுதியைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள், தமிழச்சி தங்கபாண்டியன் ஏமாற்றமடைந்திருப்பார், அதற்காக நான் இங்கு வரவில்லை, எந்த இடத்தில் நான் நிற்பேன் என எதிர்பார்த்தார்களோ, அந்த இடத்திற்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன், தமிழச்சி தங்கபாண்டியனுக்காக.
அதனால்தான் நான் முதலில் சொன்னேன், இத்தனை கொடிகள் பறப்பது தேசியக்கொடிக்காக என்று. பாஜக வந்தால் அடுத்த தேர்தல் நடக்குமோ நடைபெறாதோ என அறிஞர்கள் பயப்படுகிறார்கள், உங்கள் விரல் அசைவில் சரித்திரத்தை மாற்ற முடியும்.
மக்கள் நீதி மய்யத்தினர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள், அவர்களை அமைதியாக்கி இது நாட்டிற்கான விஷயம் அமைதியாக இருங்கள் என கூறியுள்ளேன். தமிழச்சி தங்கப் பாண்டியனை வெற்றி பெறச் செய்யுங்கள். மறுபடியும் நாம் சந்திக்க வேண்டியது இருக்கும், நன்றி சொல்ல நான் வருவேன்”, என்றார்.