கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வஸ்துக்களை ஒழித்தாலே போதும் சாமி... எங்களுக்கு வேற எதுவும் வேணாம்... என கதறும் பெண்ணின் வயிற்றில் இரண்டுமாத குழந்தை.. மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை.. , தாயும் தந்தையும் என இருவரையும் இழந்த குழந்தைகளில் ஒருவர் வரும் காலத்தின் சினிமா இயக்குநர்... கணவனை இழந்த துப்புரவு பணியாளரின் மகன் வக்கீல்.. இப்படி ஆயிரம் கனவுகளை சுமந்துகொண்டு இருக்கும் குழந்தைகளின் கண்கள் இப்போது கண்ணீரை சுமந்து நிற்கிறது.
60 ரூபாய் கள்ளச்சாராயம் ஏற்படுத்திய இழப்பு விலை மதிப்பற்ற உயிர்களை பலி வாங்கியது மட்டும் அல்ல... அவர்கள் பெற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இனி நாங்கள் என்ன செய்வோம்? அப்பாவை எங்கு சென்று பார்ப்போம் என ஏங்கும் குழந்தைகளின் மனநிலையை சரிகட்ட எந்த இழப்பீட்டால் முடியும் என கேட்கும் பெண்ணின் கேள்விக்கு யார் பதில் சொல்வது?
தெருவுக்கு தெரு மதுக்கடைகள், சந்துக்கு சந்து கள்ளச்சாராயம் விற்பனை.. விடிய விடிய குடி.. வீட்டில் உள்ள பெண்களின் நிலை மிகவும் கவலைக்கு இடமாக இருக்கும் நிலையில் நாங்கள் என்னதான் செய்வது.... நரக வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் எனக்கூறும் பாதிக்கப்பட்ட பெண்.. பெண்கள்தான் கணவன்களை திருத்த வேண்டும்.. அவர்கள் நினைத்தால்தான் முடியும் எனக்கூறும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர்
கள்ளக்குறிச்சி முழுவதையும் காவு வாங்கியுள்ள கள்ளச்சாராய சம்பவத்திற்கு தற்போது வரை 58 பலி.. இனியும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது வட்டார தகவல்.. ஏழை மக்களின் நிலைதான் என்ன..? அன்றாட உணவிற்காக அலைந்து திரியும் காக்கை குருவியை போல்.. கூலி வேலைக்கு சென்று பசியாற்றும் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது. வேலைக்கு சென்றால் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கூலி. இதை வைத்து வீட்டு செலவு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவுகளை கவனிக்க வேண்டும்.
உடல் வலிக்கு என்னதான் செய்வது? காலை முதல் மாலை வரை உடலை வருத்தி வேலை செய்து இரவு தூங்க வேண்டும் என்றால் அதற்கு போதை வேண்டும் என்ற சூழல். அதிக விலை கொடுத்து மது பாட்டில்களை வாங்கி குடிக்க வசதியும் இல்லை.. 60 ரூபாய் சாராயம்தான் எங்களுக்கான ஒரே தீர்வு என்பது தினக்கூலிகள் சொல்லும் நியாயம். இதற்கு அடிமையான பலர்.. வேலைக்கும் செல்வது இல்லை.. வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை நிம்மதியாக இருக்க அனுமதிப்பதும் இல்லை.. இந்த சூழலில்தான் கள்ளக்குறிச்சியில் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்திருக்கிறது.
அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிர்களை கள்ளச்சாராயத்திறகு பலியாக்கி இருக்கிறார்கள். அரசு தரப்பில் இருந்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி, பெற்றோரை இழந்த குழந்தைகள் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம் வைப்பு நிதி மற்றும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த குற்ற செயலுக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, கூடுதல் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். செய்திதாள்கள் முதல் டிவி சேனல்கள் வரை தொடர்ந்து தலைப்பு செய்தியாக இருக்கும் கள்ளக்குறிச்சி சம்வம் இனி தமிழகத்தின் எந்த பகுதியிலும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் என்பதும்? இதற்கு யார் பொறுப்பேற்பது என்பதும்தான் இதன் மூலம் எழுந்திருக்கும் வலுவான கேள்வி.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை... உடல் வலிக்கு என்ன செய்வது என கேட்கும் கூலி தொழிலாளியின் கேள்வி.. இதனை வைத்துக்கொண்டு ஆதாயம் அடையும் அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் ..இப்படி புள்ளிக்கோலம் போல்.. ஒன்றில் தொட்டு மற்றொன்றில் மீண்டும் தொடங்கும் பிரச்சினைக்கு முழுமையான விசாரணை மற்றும் ஆலோசனை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை மற்றும் விருப்பம்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: திமுக அரசை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்! - dmdk protest