சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 68 பேர் உயிரிழந்த நிலையில், 161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 24 பேர் வரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்தால் உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காது. அதனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, "தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக மாவட்ட வாரியாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு இதுவரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?"என கேள்வி எழுப்பியது.
இதையும் படிங்க : கோயில் யானைகளின் கோபத்திற்கு காரணம் என்ன?
மேலும், "கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரின் பணியிடை நீக்கம் உடனடியாக திரும்ப பெறப்பட்டதற்கான காரணம் என்ன? துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது?" என கேள்வி எழுப்பி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் செப்டம்பர் 19ம் தேதி ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (நவ 20) தீர்ப்பளித்த நீதிபதிகள், "சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள், தீங்குகள் மதுவால் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவங்கள் ஒரு எச்சரிக்கையாக உள்ளது. காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை.
மாநில காவல்துறை கண்டும் காணமாலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக்குகிறது. அதே வேளையில் காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு, சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிபிசிஐடி நடத்திய விசாரணை அறிக்கையை சிபிஐ வசம் 2 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்,"எனவும் தீர்ப்பளித்தனர்.