சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் தமிழி எழுத்துப் பொறித்த பானையோட்டை சிவகங்கை தொல் நடைக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா. சரவணன், துணை செயலர் முத்துக்குமரன் ஆகியோர் காளையார் கோயில் பாண்டியன் கோட்டைப் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டதில் தமிழி எழுத்து பானையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், புலவர் கா. காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "திருக்கானப்பேர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட காளையார் கோவிலில், சங்க கால கோட்டை இருந்த இடம் என்பதால், மக்களால் பாண்டியன் கோட்டை என்று வழங்கப்படுகிறது.
புறநானூற்றில் இடம்பிடித்த கோட்டை: இக்கோட்டையைச் சுற்றி அகழி, நடுவில் நீராவி குளம் உள்ளிட்டவை 37 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளன. புறநானூற்றில் 21வது பாடலில் கானப்பேர் பாண்டியன் கோட்டை பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. இப்பகுதியை குறுநில மன்னனான வேங்கை மார்பன் ஆட்சி செய்தபோது அவனது உறுதியான கோட்டையை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி கொண்டான்.
அது இரும்பு உலையில் கொதித்த இரும்பில் நீரை ஊற்றும் போது இரும்பானது நீரை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் அதைப்போல பாண்டியன் உக்கிரப் பெருவழுதியிடம் சென்ற இக்கோட்டையை மீளப் பெற முடியாது, என்னும் செய்தி அப்பாடலில் இடம் பெற்றுள்ளது.
இலக்கியச் சான்றோடு வரலாற்றுச் சான்றாக இன்றும் இக்கோட்டை விளங்குகிறது. கோட்டையின் காவல் தெய்வமாக கிழக்குப் பகுதியில் முனீஸ்வரர் கோவிலும் தெற்குப்பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் அமைந்துள்ளன. இப்பகுதி முழுவதும் பானை ஓடுகள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.
பானையோட்டில் தமிழி எழுத்துகள்: சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது இக்கோட்டைப் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு செய்து வருகிறது. அதில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன. வட்டச் சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள், பானை ஓட்டுக்கிறல்கள், குறியீடுகள், 2000 ஆண்டுகளுக்கு பழமையான தமிழி எழுத்து எழுதப்பட்ட பானையோடு, நெசவுக்கு அல்லது வேறொரு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவிகள் ஆகியவை முன்பு கிடைத்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் மோசிதபன் என்று எழுதப்பட்ட தமிழி எழுத்து பானையோடு மேற்பரப்பு கள ஆய்வில் இவ்விடத்தில் கிடைத்தது. தற்பொழுதும் மேற்பரப்பு கள ஆய்வில் 2000 ஆண்டுகளுக்கு பழமையான தமிழி எழுத்தில் ' ன் கூட்டம்' என்று எழுதப்பட்ட பானையோடு ஒன்று கிடைத்துள்ளது. "ன்" என்பது தனி எழுத்தாகவும் அதனை அடுத்து இடைவெளியுடன் தொடர்ந்து கூட்டம் என்பது தொடர்ச்சியாகவும் வந்துள்ளது.
தொல்லியல் அறிஞர்களின் மேலாய்வில் 'ன் கூட்டம்' அல்லது 'ன் ஊட்டம்' என வாசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலிருந்து கீழாகவோ கீழிருந்து மேலாகவோ எழுதப்பட்ட எழுத்துகள், பொதுவாக பானைகளில் இடமிருந்து வலமாக எழுத்துகள் எழுதப்படுவது வழக்கம். ஆனால் இப்பானை ஓட்டில் எழுத்துகள் கீழிருந்து மேலாகவோ, மேலிருந்து கீழாகவோ எழுதப்பட்டிருக்கிறது. பானை வளைந்த சக்கர அச்சுப்பதிவு எழுத்துக்கு நேர் மாறாக அமைந்துள்ளதால் இவ்வாறான முடிவுக்கு வர முடிகிறது.
தொடர்ந்து கிடைத்த தமிழி எழுத்து பொதித்த பானையோடு: இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோட்டையின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடியாததால் நீராவி குளத்தின் இருபக்கமும் மழைநீர் வெளியேறும் வண்ணம் மூன்றடி ஆழத்தில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. அக்கால்வாய் பள்ளத்திலே முன்பும் தற்போது தமிழி எழுத்து பானையோடு கிடைத்திருக்கிறது.
தொடர்ச்சியாக தமிழி எழுத்து பானையோடு பாண்டியன் கோட்டை பகுதியில் கிடைப்பதால் இது கானப்பேர் எனும் பாண்டியன் கோட்டை அமைந்த முதன்மை பகுதி என்பதோடு வரலாற்றுத் தொன்மை புதைந்த மேடாகவும் உள்ளது. இவ்விடத்தில் தொல்லியல் துறை அகழாய்வு செய்யும்போது பழமையான வரலாறு வெளிப்படும். மேலும் தமிழி எழுத்து பொறித்த பானையோட்டின் மதிப்பு கருதி பின்பு சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்படும்" என்று காளிராசா தெரிவித்தார்.
இதையும் படிங்க: கீழடி 10ஆம் கட்ட அகழாய்வு; தந்தத்தாலான ஆட்டக்காய் கண்டெடுப்பு!