தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் 'மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்' அப்பகுதியில் இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில், தேனி, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 20 பெரிய மாடுகளுக்கு 6 மைல் தொலைவிலும், 36 சிறிய மாடுகளுக்கு 5 மைல் தொலைவில் நடைபெற்றதில், மொத்தம் 56 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. இந்த போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற பெரிய மாட்டு வண்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.20,076, இரண்டாம் பரிசாக ரூ.17,076, மூன்றாம் பரிசாக ரூ.15,076, சிறிய மாட்டு வண்டிக்கு முதல் பரிசாக ரூ.15,076, இரண்டாம் பரிசாக ரூ. 12,076, மூன்றாம் பரிசாக ரூ.10,076 என வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசுகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதால் இந்த விஷயத்தில் கருத்து கூற இயலாது என்றாலும், அவர் திமுகவில் பொறுப்பிலிருந்துள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் மிகவும் நெருக்கம் காட்டி வந்துள்ளார். தொடர்ந்து திரைப்படத்துறை, ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு செய்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வந்துள்ளது. அவரிடம் நடைபெறும் விசாரணைக்குப் பின் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும்.
மேல்மட்டத்தில் எவ்வளவு தொடர்பு அவருக்கு உள்ளது என்பதை மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தமிழகத்தில் எவ்வளவு பெரிய விஸ்வரூபம் ஏற்படுத்தியதோ, அதையும் தாண்டி போதைப்பொருள் கிட்டங்கியாக தமிழகம் மாறி இருக்கிறது என்பதற்கு இது மூலக் காரணமாக இருக்கும்.
போதைப்பொருள் தொடர்பாக ஒருவரைக் கைது செய்தால் மட்டும் போதாது. அதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். உண்மைச் செய்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகிற மார்ச் 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி மக்களின் கவனத்திற்கும், மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவின் கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் போதைப்பொருட்களின் கேந்திரமாக தமிழகம் விளங்கி வருகிறது” எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் வாழ்வதற்கு மக்கள் அச்சப்படும் சூழ்நிலை இருக்கிறது. இதனால் திமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாக குறையும். இந்த ஆட்சி இருந்தால் தமிழகமே போதை மாநிலமாக மாறிவிடும். போதைப்பொருள் எதிர்ப்பு அலை இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழக அரசு விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு, பால் விலை ஏற்றம் போன்ற பல்வேறு சுமைகளை மக்கள் மீது சுமத்தி இருக்கிறது. இதனால் இந்த ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அதிமுக தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளும் வெற்றி பெறும்.
திமுக ஏற்கனவே இருந்த கூட்டணியை புதுப்பித்துள்ளனர். புதிதாக யாரையும் சேர்க்கவில்லை. புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுகவின் மேல் உள்ள எதிர்ப்பு, அதன் கூட்டணிக் கட்சிகள் மீது சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "40 தொகுதிகளிலும் தலா 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை