ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையைக் கண்டித்து தொடரும் ராமேஸ்வர மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக, இந்த ஆண்டு (2024) நடைபெற இருக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், இந்தியா தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகும் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை ஆகிய இருநாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கோடு, ஆண்டுதோறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்திருருவிழாவில், இந்தியாவில் இருந்து 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளதாக, இருநாட்டு அரசாங்கமும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவத்தின் எதிரொலி காரணமாக, ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல், தொடர்ந்து ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நேற்று (பிப்.20) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மீனவர்களை விடுவிக்கக் கோரி நடைபயண போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து விவரம் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர், பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து மீனவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதையடுத்து, மீனவர்கள் நடைபயண போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது வரை தொடர்கிறது. இந்நிலையில், இந்த போராட்டத்தின் எதிரொலியாக, மீனவர்கள் தங்கள் படகுகளைக் கொடுக்க முடியாது என அறிவித்துவிட்டதால், இலங்கையில் நடைபெற உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு, இந்தியா தரப்பிலிருந்து பக்தர்கள் பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தற்போது தெரிவித்துள்ளார்.
மேலும், கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல பணம் கட்டிய நபர்களின் தொகை மீண்டும் வழங்கப்படும் எனவும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பதிவு செய்த நபர்கள், வீண் அலைச்சலை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில்.. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்!