தென்காசி: 18வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தென்காசியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா? ராகுலா? என்ற கருத்து மையம் கொண்டதால் அதிமுக தலைமையிலான கூட்டணி மக்கள் சக்தியாக உருவாக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆதரவு மற்றும் பாஜக எதிர்ப்பு என அகில இந்திய அளவில் கூட்டணி குறித்தான கருத்துக்கள் மட்டுமே பேசப்பட்டது எனவும், அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணி மீது மக்கள் எதிரான வாக்குகள் அளித்ததாக கருத முடியாது எனவும், மேலும் வரக்கூடிய தேர்தல்களில் இதே நிலை நீடிக்காது, மாற்றம் கண்டிப்பாக நிகழும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழப்பு ஏற்பட்டதால் அதிகார பொறுப்பிற்கு வந்து கனிமவள கடத்தல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாமல் போனது குறித்த வருத்தம் உள்ளதாகவும், தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவேன் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் கட்டாய விருப்ப ஓய்வை மிரட்டி வாங்குகின்றனர். அந்த வகையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நிலை அறிய வழக்கறிஞர் குழு அமைக்கப்பட உள்ளதாக” தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை தொகுதியை கோட்டைவிட்ட அதிமுக... பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அண்ணாமலை ஜெயித்திருப்பாரா? - ADMK Defeat In Coimbatore Constituency