மயிலாடுதுறை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து, மயிலாடுதுறை பிரச்சார பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று ‘கை சின்னத்தில்’ வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “உள்ளாட்சிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற்று பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். ஆனால், மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் தீர்மானம் கொண்டுவந்து அதனை நிறைவேற்றினர். இருப்பினும், 2036 ஆம் ஆண்டுதான் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று அறிவித்தனர். பாஜக பெண்களுக்கு எதிரான அரசு.
பாமக எந்த கொள்கையின் அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக கூறும் அதிமுகவினர், சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என எண்ணுகின்றனர். அதற்கு சில சிறுபான்மையினர் அணியினரும் துணை போகின்றனர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்திருந்தால் அதனை நடைமுறைப்படுத்தி இருக்க முடியாது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பிரதமர் மோடியுடன் இணைந்து 4 ஆண்டுகள் ஆட்சியை தக்கவைத்தனர். தற்போது டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதேபோல், பாஜக தீபத்தில் அதிமுக விரைவில் கலக்க போகிறது. அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றி வருகிறார். வலுவான கூட்டணியை அமைக்க அதிமுகவால் முடியவில்லை.
இந்த தேர்தலில் அதிமுக, பாமகவுக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கே போகும். இதுவரை, எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் பாஜக பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்காமல் உள்ளார். தங்கள் வீடுகளுக்கு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். பைனாகுலர் வைத்து தேடினாலும் தேமுதிக கட்சி எங்கியிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள ஒரு கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.
ஜனநாயகத்தையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க இந்தியா கூட்டணி வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. ஜுன் 4ஆம் தேதி தேர்தல் முடிவில், இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெற்றதும், அரை மணிநேரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெற்றதும் பிரதமர் மோடி வேண்டாம்; ஒரு லேடி என்று எம்.பி.க்கள் கூறினால் என்ன செய்வார்கள். கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் எந்த ஒரு சாதனையும் இல்லை. எனவே இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாக்க, அமைதியான நாடாக திகழ இந்தியா கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றிபெற கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல்.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு.. முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? - BJP Manifesto 2024