திருவண்ணாமலை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மக்களை சந்திப்பதற்காக ’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார்.
தாலுகா அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகளான திருவண்ணாமலை, திண்டிவனம் சாலையில் கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் வரை நடைபயணமாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பேருந்து நிலையம் அருகில் திறந்தவெளி வேனில் அண்ணாமலை பேசும் போது, "தமிழ்நாட்டை பொறுத்தவரை குறுநில மன்னர்கள் போல சில குடும்பங்கள் மட்டுமே மக்களுக்கு வர வேண்டிய வரிப்பணத்தை திருடி, திருடி கொழுத்து இருக்கிறார்கள்.
அதில் முக்கியமானவர் அண்ணன் எ.வ.வேலு, அவரை ஏடிஎம் வேலு என கூறுவார்கள். 24 மணி நேரத்திற்கும் திமுக மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பணம் வேண்டுமோ அவ்வப்போது பணம் கொடுப்பதால் எனி டைம் மணி அதுதான் அவர் செய்த சாதனை என கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் பல மத்திய அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு தடையின்றி நேரடியாக சென்றடைய செய்தார். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பது அவர் குறிக்கோள் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர்கள், நகர தலைவர்கள் உட்பட ஏராளமான பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காலை சிற்றுண்டியில் பல்லியா? மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! திருவண்ணாமலையில் பரபரப்பு!