திருநெல்வேலி: இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக 18வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு, மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றே வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில், திமுக சார்பில் நெல்லை தொகுதி, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரசில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக, நெல்லையில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது. அக்கட்சியைச் சேர்ந்த பீட்டர் போன்ஸ், ராமசுப்பு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டனர்.
இதனை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ், நெல்லையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த நெல்லை காங்கிரஸ் நிர்வாகிகள், வேட்பாளருக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
இத்தகைய பரபரப்பான சூழலில், வேட்புமனுத் தாக்கலின் இறுதி நாளான இன்று (மார்ச் 27), வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக, நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்புவும், போட்டி வேட்பாளராக மனுத் தாக்கல் செய்வதற்காக வந்திருந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இது குறித்த செய்தியை சேகரிப்பதற்காகவும், ராமசுப்பு மனுத்தாக்கல் செய்வதை படம் பிடிப்பதற்காகவும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், ராமசுப்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளே சென்ற தகவலை ஆட்சியர் தெரிவிக்காததால், ராமசுப்பு மனுத்தாக்கல் செய்ததை யாரும் படம் பிடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக, பத்திரிகையாளர்கள் சுமார் 50 பேர் ஆட்சியர் அறை முன்பு தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், அங்கு வந்த காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சாரே, பத்திரிகையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஆட்சியர் தங்கள் முன் வந்து பேச வேண்டும், உள்ளே விட மறுத்த காரணத்தைக் கூற வேண்டும், அதுவரை கலைந்து செல்ல மாட்டோம் என போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனை அடுத்து, சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்துக்குப் பிற,கு ஆட்சியர் கார்த்திகேயன் போராட்ட இடத்துக்கு நேரில் வந்தார். மேலும், உள்ளே விட வேண்டாம் என நான் எந்த உத்தரவும் போடவில்லை என விளக்கம் கொடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: “என்னால் மன்னிப்பு கூற முடியாது” - கோவை அதிமுக வேட்பாளரின் தந்தை குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்!