கரூர்: குளித்தலை வருவாய் வட்டம் கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாவத்தூர் கிராமம், ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மூன்று தலைமுறையாக சுமார் 2.34 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, தனது ஐந்து மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து பேரக்குழந்தைகளுடன் சுமார் 25 நபர்கள் கொண்ட கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியின் இருதய பாதிப்பைச் சரி செய்யக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதற்கு பெரும் தொகை செலவாகும் என மருத்துவர்கள் கூறியதால், அப்பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் ரவிச்சந்திரனிடம் கடனாக ரூ.14 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு அவர், கடன் தொகைக்கு அடமானமாக நிலத்தை தன் பெயரில் எழுதித் தர வேண்டும், திருப்பித் தரும் பொழுது நிலத்தை பெருமாள் பெயருக்கு எழுதி தருவதாகக் கூறியுள்ளார்.
Rs.14 லட்சத்துக்கு இவ்வளவு வட்டியா?: அதனை நம்பி, வேறு வழியின்றி 14 லட்சத்தை பெற்றுக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், கிட்டத்தட்ட ரூ.1 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிலத்தை வெறும் ரூ.14 லட்சத்திற்கு எழுதிக் கொடுத்துள்ளனர். மேலும், 2021ஆம் ஆண்டு கடன் தொகை ரூ.14 லட்சத்துடன் வட்டி சேர்த்து வழங்குவதாக பைனான்சியர் ரவிச்சந்திரனிடன் பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால், ரவிச்சந்திரனோ அசல் வட்டியுடன் சேர்த்து ரூ.60 லட்சம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை மீண்டும் எழுதித் தர முடியும் எனக் கூறியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த பெருமாள் குடும்பத்தினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளனர். ஆனால், சிவில் ரீதியான பிரச்சனையை இரு தரப்பும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என பதில் கடிதம் வழங்கி, பெருமாள் குடும்பத்திற்கு கரூர் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடனை செலுத்தாததால் கைமாறிய நிலம்?: பின்னர் பெருமாள் குடும்பத்தினர் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களை வைத்து ரவிச்சந்திரனிடம் பேசிய போது, ரவிச்சந்திரன் அந்த நிலத்தை, குலக்காரன்பட்டி கண்ணுசாமி பெயரில் எழுதிக் கொடுத்துவிட்டு, கடன் தொகையைக் கட்ட தவறியதால் நிலத்தை வேறு ஒரு பெயருக்கு மாற்றி விற்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கண்ணுசாமியும், அவரது மனைவியுமான பாலவிடுதி காவல் நிலைய காவலர் மீனாட்சி ஆகியோர் பெருமாள் உழுது வரும் விவசாய நிலத்தை, உடனடியாக காலி செய்ய வேண்டும் என மிரட்டி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, "தான், பாலவிடுதி காவல் நிலையத்தில் போலீசாக இருக்கும் வரை உன்னால் எதுவும் செய்ய முடியாது" என மீனாட்சி தொடர்ந்து மிரட்டி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினரும் புகார் மனு அளித்தனர்.
நிலத்தை விற்றுவிட்டதாக நாடகம்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெருமாள், "ரூ.14 லட்சம் கடன் தொகைக்கு அசல் வட்டியுடன் திரும்ப செலுத்துவதாகக் கூறியும், ரவிச்சந்திரன் தொடர்ந்து சொத்தின் பத்திரத்தை மாற்றி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். தாங்கள் ஏமாற்றப்பட்டது அறிந்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்படாமல் ரவிச்சந்திரன் வேறொரு நபருக்கு நிலத்தை எழுதிக் கொடுத்து விட்டதாக நாடகம் ஆடி வருகிறார்.
தற்போது கண்ணுசாமியும், அவரது மனைவி மீனாட்சியும் அடிஆட்களை வைத்து, அவ்வப்போது வந்து குடியிருந்த வீட்டை இடித்து, எங்களை வெளியேற்றப் பார்த்தனர். இதனைக் கண்டித்து அப்பகுதியில் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு எங்கள் மீது பாலவிடுதி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால் வீட்டை இடித்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அதனால், தற்போது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினர் கண்ணுசாமி, அவரது மனைவி பாலவிடுதி காவல் நிலைய காவலர் மீனாட்சி ஆகியோரிடமிருந்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும், தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "மாவத்தூர் கிராமத்தில் பட்டியலின மக்களான பெருமாள் குடும்பத்தினர் மட்டுமே 2 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், நிலத்தை அபகரிக்கப் பார்க்கின்றனர்" என பாதிக்கப்பட்ட பெருமாளின் மகன் மணிகண்டன் தெரிவித்தார்.
தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் சாதிய கொடுமை குறித்துப் பேசும் வசனம் ஒன்றில் நிலம் வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள் என்பதையே நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த கரூர் சம்பவம்.
காவல்துறை நடவடிக்கையை பொருத்தே தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என காத்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.