தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உள்ள டாக்டர் அன்னிபெஸன்ட் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் பணியாற்றி வந்தவர் தேவநாதன் (51). திருவாரூர் பழையவலம் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நகைக்கடையில் தள பராமரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இவர் கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில் உள்ள தனியார் வளாகத்தின் 2வது தளத்தில் உள்ள அறையில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, தேவநாதன் பணிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து நகைக்கடை மேலாளர் தேவநாதனின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவர் பதிலளிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனிடையே, நேற்று (பிப்.14) தேவநாதனின் உறவினர்கள், அவருக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால், இணைப்பு கிடைக்காமல் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. பல முறை அவர்கள் முயற்சி செய்தும், இதே நிலை நீடித்துள்ளது. அதன் பின்னர் சந்தேகம் அடைந்த தேவநாதனின் உறவினர்கள், அவர் பணியாற்றும் நகைக்கடையின் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது, அவர் இரண்டு நாட்களாக பணிக்கு வரவில்லை என தகவல் அளித்துள்ளனர். பின்னர், அவர் பணிபுரியும் அலுவலகத்தினர், தேவநாதன் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று நேரில் பார்த்தபோது, அறை உட்புறம் தாழிடப்பட்டு இருந்துள்ளது. கதவை தட்டியும் திறக்காததால், இது குறித்து காவல் துறைக்கும், தேவநாதனின் குடும்பத்தினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
அதன் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தேவநாதன் தனது படுக்கையிலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும், கடுமையான துர்நாற்றம் வீசியதால், அவர் உயிரிழந்து இரண்டு நாட்கள் கடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தஞ்சையில் இருந்து தடய அறிவியல் மற்றும் கைரேகை பதிவு நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு, தடயங்கள், கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த தேவநாதனுக்கு, கவிதா (45) என்ற மனைவியும், நந்தினி (25) மற்றும் நர்மதா (22) என இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டைக் குழந்தைகளுடன் கேரளா தம்பதி 4 பேர் சடலமாக கண்டெடுப்பு - அமெரிக்காவில் நடந்தது என்ன?