சென்னை: சென்னை,கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழு அலுவலகத்தில் பெருநகர சென்னை காவல் இணை ஆணையர் விஜய குமார் தலைமையில், கோயம்பேடு தலைமை நிர்வாக அலுவலரும்,மாவட்ட வருவாய் அலுவலருமான இந்துமதி முன்னிலையில் மொத்த விற்பனை அங்காடி வளாக வியாபாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று(பிப்.06) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காவல் துறை இணை ஆணையர் விஜய குமார் பேசும் போது "கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வியாபாரிகளிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களின் விவரங்களை சங்கத்தின் மூலமாக 15 நாட்களுக்குள் காவல்துறைக்கு அளித்திட வேண்டும்.
மேலும், கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தி அங்காடிக்கு வரும் சரக்கு வாகனங்களைத் தணிக்கைக்கு உட்படுத்துவதன் மூலம் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவதைத் தடை செய்யலாம். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, வியாபார நேரத்தில் ரோந்து பணியினை தீவிரப்படுத்த காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள், பண்டிகை காலத்தில் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் போக்குவரத்து காவல்துறையினரை வளாகத்தில் பணியில் ஈடுபடுத்த வேண்டும், வணிக வளாகத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தது போன்று, மாநகர பேருந்துகள் வளாகத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உணவு தானிய அங்காடியில் இரவு 7 மணி முதல் அதிகாலை வரை ரோந்து பணியினை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர். இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி பேசுகையில் "வியாபாரிகள் அனைவரும் 2024ஆம் ஆண்டு முதல் 2027ஆம் வரை தொகுப்பாண்டிற்குரிய விண்ணப்பத்தினை எதிர்வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பொது சிவில் சட்டம் என்றால் என்ன? மக்களவை தேர்தலுக்கு முன் நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஏன் தீவிரம்?