சேலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ அழகுதுரை மற்றும் போலீசார், நேற்று மாலை தாரமங்கலம் - நங்கவள்ளி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இடைப்பாடியை அடுத்த சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் அந்த வழியாக வந்தார்.
அப்போது வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ அழகுதுரையிடம், தனபால் 'என் மீது மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் பொய் வழக்கு போட நீயும் உடந்தையாக இருந்திருக்கிறாய் ' என பொது இடத்தில் பேசியதோடு, அவரது சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட சக போலீசார் தனபாலை தடுத்துள்ளனர். ஆனால், அவர் அடங்காமல் அழகுதுரையையும், மேச்சேரி இன்ஸ்பெக்டரையும், கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால். போலீசார் அவரை தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், பொது இடத்தில் எஸ்ஐயை தரக்குறைவாக பேசியதற்காகவும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததற்காகவும், தனபால் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: குடத்து தண்ணீரை குளத்தில் ஊற்றி ஆயி குளத்தை நிரப்பிட நூதன போராட்டம்!