சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய எம்ஜிஆரின் மறைவிற்குப் பின்னர் ஏற்பட்ட பிளவை சரி செய்து, வலுவான அரசியல் கட்சியாக அதிமுகவை கட்டமைத்து, 1991ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா.
அவரைத் தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது அதிமுக. இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக, 1991 முதல் 1996 வரை தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில், அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான வி.என்.சுதாரகன், ஜே. இளவரசி ஆகியோரும் வருமானத்துக்கு மீறி 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக 1997ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலத்தை, ஜெயலலிதா இயக்குனராக இருந்த நிறுவனம் வாங்கியது தொடர்பான இருவேறு வழக்குகளில், 2000ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு, ஒரு வழக்கில் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 2001 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடாத நிலையில், அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, மே மாதம் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றார்.
இதனை எதிர்த்து எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட ஜெயலலிதா பதவி ஏற்றது செல்லாது என 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. "ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பொது ஊழியராக இருக்க முடியாது" என உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து ஜெயலலிதா பதவி விலகினார். இதற்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் முதன்முறையாக முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம், 2001 செப்டம்பர் மாதத்திலிருந்து 2002 மார்ச் மாதம் வரை முதலமைச்சராக பதவியில் இருந்த நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து விடுவிக்கப்பட்ட பிறகு, 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா.
அதனைத் தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், அவர் மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கு விசாரணை, திமுகவின் கோரிக்கையை ஏற்று பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதத் தொகையும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி குன்ஹா உத்தரவிட்டார். இந்த நேரத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார்.
தீர்ப்பு தனக்கு சாதகமாகவே வரும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்த ஜெயலலிதாவுக்கு, இந்த தீர்ப்பு அதிர்ச்சியாக இருந்தது. தண்டனை பெற்றதால் பதவிக்கான தகுதி இழந்த ஜெயலலிதா, நீதிமன்ற வளாகத்திலிருந்தே, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதலமைச்சராக்குவதாக அறிவித்தார்.
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் சிறைக்குச் செல்லும் முதல் முதலமைச்சர் ஆனார், ஜெயலலிதா. இதன் மூலம் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியை இழந்த நபராகவும் மாறினார். மீண்டும் அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இரண்டாவது முறையாக, 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் 30 அமைச்சர்களுடன் பதவி ஏற்றார்.
அதனைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி பெங்களூர் உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, இவ்வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்ததைத் தொடர்ந்து, மே 23ஆம் தேதி 2015ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், இதே வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சசிகலா உள்ளிட்டோர் சிறைத் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவால் கைது; உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ்.. 10 நாட்கள் காவல்!