சென்னை: வஃக்பு வாரிய திருத்தச் சட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மௌலானா பஃஸ்லூர் ரஹிம் முஜாதி ஆகியோர் கூட்டாகச் சந்தித்து பொது சிவில் சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மௌலானா பஃஸ்லூர் ரஹிம் முஜாதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, "சமீபத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வஃக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில், அது தற்பொழுது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "வஃக்பு வாரிய திருத்தச் சட்டத்தை முஸ்லீம் சமூகம் ஏன் எதிர்க்கிறது என்பது குறித்தும் மற்றும் பொது சிவில் சட்டம் குறித்தும் முதல்வரிடம் விவரித்தோம். எங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர், வஃக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கும், பொது சிவில் சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், என்றும் உங்களுக்கு துணை நிற்போம் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது..” உதயநிதி விவகாரத்தில் எல்.முருகனுக்கு கீதா ஜீவன் பதிலடி!