சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்திய ஆராய்ச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி பாரதியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, அறிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், அறியப்படாத தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் எழுதிய 89 ஆய்வு நூல்களை வெளியிட்டார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நேரில் அழைத்து வந்து ஆளுநர் ஆர்.என் ரவி மரியாதை செய்தார்.
விழாவில் பேசிய தமிழக ஆளுநர், "ஜம்புத்தீவு பிரகடனம்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம். அந்த சுதந்திர தியாகிகளை நினைவு கூறுகையில் முதலில் குறிப்பிடத்தக்கவர்கள் மருது சகோதரர்கள். 1801ஆம் ஆண்டு ஜம்புத்தீவு பிரகடனத்திலேயே ஐரோப்பியர்களை எப்படி வீரட்ட வேண்டும் எனத் தெரிந்து வைத்து இருந்தனர். ஏன்னென்றால் அவர்களின் உத்திபடி சாதி, மதம் பிரிவினையின்றி அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஐரோப்பியர்களை வெளியேற்றுவதாக இருந்தது.
அதேபோல் நேதாஜி பல நாடுகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர். மேலும் அதற்காக 5,000 வீரர்கள் இந்த மண்ணிலிருந்து அங்குச் சென்று தன் உயிரையும் இழந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு வந்தபோது தமிழகத்தில் பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகள் இருந்ததை அறிந்தேன். ஆனால் அதில் பல உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது. சுதந்திரம் போராட்ட தலைவர்கள் ஜாதித் தலைவர்களாக மாற்றப்பட்டு உள்ளனர்.
ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனைத் தூக்கிட்டு கொலை செய்த பின்னர், அவர் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி நகரை ஆங்கிலேயர்கள் தரை மட்டம் ஆக்கினார். மேலும் அங்கு மண் வளத்தைக் கெடுக்க உப்பினை தூவி கொடுமை செய்தனர். இவ்வாறு நாம் அடைந்த சுதந்திரமான இந்தியாவில் நாம் மொழியாலும் மாநிலத்தாலும் பிரிந்து உள்ளோம். அவற்றைக் களைந்து ஒன்றிணைய வேண்டும்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் முதலில் அறியப்படாத 100 சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி ஆராய வேண்டும் என முடிவெடுத்ததின் பேரில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் முன் வந்து மிகச் சிறப்பாக பணியை, சேவையைச் செய்துள்ளார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த தொடர்ந்து ஆய்வு நடைபெறவுள்ளது" என ஆளுநர் ரவி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்" - மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்