சென்னை: ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர்.
தற்போது டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தன் மீது தவறான உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டவிரோதமான கைதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், திஹார் சிறையில் உள்ள தன்னை அமலாக்க துறை வழக்கில் கைது செய்வது தொடர்பாக அமலாக்கத் துறை வாரண்ட் பெற்றுள்ளது' எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், "கைதுக்கு எதிராக ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, அதுகுறித்து வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்" என வாதிட்டார். அதனையடுத்து விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை ஒருவரைகூட கைது செய்யாதது ஏன்? - அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!