சேலம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும், சரண் விடுப்பு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிமிக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதிய குழுவில் 21 மாத நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கான ஆயத்த மாநாடு சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் நான் பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெ.அர்த்தநாரி துவக்க உரையாற்றினார். இது குறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணா குபேரன் கூறுகையில், "திமுக அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது தேர்தல் அறிக்கையில் கூறிய படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அதை மறுக்கும் பட்சத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திலும் அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட திட்டமிட்டு உள்ளோம்.
அரசு ஊழியர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான பொருளாதார இழப்பிலும் ஏமாற்றத்திலும் உள்ளனர். இதனை உணர்ந்து ஆளும் திமுக அரசு உடனடியாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இல்லை என்றால் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துறை ஊழியர்கள் ஈடுபட வேண்டி சூழ்நிலை ஏற்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!