திருநெல்வேலி: தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கச்சத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு தேர்தலிலும் கச்சத்தீவு விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையில் எடுத்து வருகின்றனர்.
கச்சத்தீவு காங்கிரஸ் ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது என்றும் அதற்கு திமுக உடனடியாக செயல்பட்டதாகவும் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் உள்ள அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத்தீவு குறித்து பலமுறை சட்டசபையில் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது குறித்து ஆர்டிஐ தகவல் ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். குறிப்பாகத் தமிழகத்தில் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுத்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதேசமயம் கடந்த 10 ஆண்டுகளாக உறக்கத்திலிருந்துவிட்டு தற்போது தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு பற்றிப் பேசுவதாக திமுக பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் திமுக செய்த வரலாற்றுப் பிழை வெட்ட வெளிச்சம் ஆகி இருப்பதாகத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்தியேகமாகத் தெரிவித்துள்ளார்.
அதாவது ஜி.கே வாசன் இன்று நெல்லை வீரவநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார் அப்போது ஈடிவி பாரத் சார்பில் ஜி கே வாசனிடம் பிரத்தியேகமாக நேர்காணல் எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் முதல் முறையாக பாஜக தலைமையில் பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளீர்கள். உங்கள் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளித்தவர், “ தமிழக வாக்காளர்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். வளமான பாரதத்தை வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்கத் தமிழக மக்கள் தயாராக இருக்கின்றனர்.
எங்கள் கூட்டணி மீது நம்பிக்கையோடு இருக்கின்றனர்” என்றார். அதனைத் தொடர்ந்து, கச்சத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீங்கள் ஏற்கனவே காங்கிரசில் பயணித்துள்ளீர்கள். இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன என கேள்விக்குப் பதிலளித்தவர், “கச்சத்தீவு குறித்த வரலாற்றுப் பிழையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக உடந்தையாக இருந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது” என கூறினார்.