சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், தேர்தலில் பணப் பட்டுவாடா,பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பொது மக்களுக்கு வழங்குவதைத் தடுப்பதற்காகவும் பறிமுதல் செய்வதற்காகவும் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.மேலும், பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு மாநில முழுவதும் தீவிர சோதனை செய்து வாகன தணிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்கி வருவதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட வருமான வரித்துறை கட்டுப்பாட்டறைக்குத் தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சென்னை,திருச்சி,திருநெல்வேலி, சேலம்,கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையைப் பொருத்தவரை விருகம்பாக்கம் ரத்னா நகர்ப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறையின் சோதனைக்குப் பிறகு கைப்பற்றப்பட்ட பொருட்கள், பணம்,ஆவணங்கள் குறித்து முழுமையாக விவரங்கள் வெளிவரும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.