சேலம்: தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (ஏப்.9) சேலம் குரங்கு சாவடி அருகே பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு இல்லத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் இன்று மாலை 5.30 மணி அளவில் அவரது இல்லத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்த சோதனையில் பணம் ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய பணம் வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டோம். ஆனால், சோதனையில் பணமும் மற்ற பொருட்களையும் பதுக்கி வைக்கவில்லை எனத் தெரிய வந்தது. ஆனாலும், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினர்.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வந்திருந்த சூரமங்கலம் உதவி ஆணையாளர் நிலவழகன் மற்றும் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீண்டும் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என சுரேஷ்பாபுவிடம் கூறிக்கொண்டு உள்ளே நுழைய முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு, மீண்டும் காவல்துறை எதற்காக சோதனை நடத்த வேண்டும், அப்படி என்றால் அதற்கான ஆவணங்கள் ஏதாவது வைத்துள்ளீர்களா என பாஜகவினர் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலறிந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டுக்கு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு கூறும் போது, "தேர்தலுக்குப் பணம் கொடுக்க வீட்டில் பணம் வைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து, வருமான வரித்துறையினர் வந்து சோதனை நடத்தினர். சோதனையில் பணம் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்றனர்.
ஆனால், பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறையினர் சோதனை நடத்த வேண்டும் எனக் கூறுவது தேவையற்றது. ஆளும் திமுக அரசின் தூண்டுதல் பேரிலும், தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்றும், வேறு ஏதோ உள்நோக்கத்துடனும் காவல்துறையினர் செயல்படுகின்றனர் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் காவல்துறையினர் மீண்டும் சோதனை நடத்தக்கூடாது. அத்துமீறிய காவல்துறை மீது சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சியில் ஆதரவற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு செருப்பு வாங்கி கொடுத்த 10ஆம் மாணவி.. குவியும் பாராட்டுகள்! - Slipper FOR NEEDY PEOPLE IN TRICHY