திண்டுக்கல்: நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவர், தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநராக உள்ளார். அதே பகுதியில் கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் வேலு (20). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் அரசு கட்டிட காண்டிராக்டர் கிருஷ்ணனிடம் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை (மே 6) நடுப்பட்டியில் நடைபெற்று வரும் சாக்கடை கட்டிடப் பணியின் காரணமாக, டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதி பெண்கள் டேங்கர் லாரியில் தண்ணீர் பிடித்துள்ளனர். அப்போது, கரியாம்பட்டியைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் சக்திவேல் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம் மொபைல் எண் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அப்பெண் உடனடியாக தனது உறவினர் விஜயிடம் கூறியதாகத் தெரிகிறது. அப்போது, அங்கு வந்த விஜய் தனது உறவினர் வேலுவைப் பார்த்து “கரியாம்பட்டியைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் சக்திவேல், நமது ஊர் பெண்ணிடம் போன் நம்பர் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் ஏன் சத்தம் போடவில்லை?” எனக் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, கரியாம்பட்டியைச் சேர்ந்த சக்திவேலும், நடுப்பட்டியைச் சேர்ந்த வேலுவும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் அதுகுறித்து உரிமையாளர் கிருஷ்ணனிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக உரிமையாளர் கிருஷ்ணன் கரியாம்பட்டி சக்திவேலுவை கடுமையாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், ஆத்திரமடைந்த கரியாம்பட்டி சக்திவேல், நேற்று மாலை நடுப்பட்டியைச் சேர்ந்த வேலுவிடம் பேசி மது குடிக்க காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அங்கு நடுப்பட்டி வேலுவை, சக்திவேலு, மருதை மற்றும் அவரது நண்பர்கள் சிலர், அந்த இளம் பெண்ணின் செல்போன் என்னை நீயே வாங்கிக்கொடு என்று கேட்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதிலிருந்து தப்பி வந்த வேலு, நடந்த சம்பவத்தை நடுப்பட்டி மக்களிடம் கூறியதையடுத்து, அவரது உறவினர்கள் விஜய், அழகுபாண்டி ஆகியோர்அவ்வழியாக வந்த சக்திவேலுவை கண்டித்துள்ளனர். இதில், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதில், கரியாம்பட்டி சக்திவேல் தரப்பினரால் நடுப்பட்டியைச் அழகுபாண்டி தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அழகுபாண்டியை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அழகுபாண்டியின் தலையில் பலத்த காயம் என்பதால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேபோல கரியாம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல், மருதை மற்றும் சிலர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலக்கோட்டை காவல்துறையினர், திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த சக்திவேல், மருதை உட்பட 4 இளைஞர்களை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் நடுப்பட்டி சேர்ந்த கூலி தொழிலாளி ஆண்டார்(55) அவரது வீட்டின் முன்பு வாசலில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் திடீரென புகுந்து ஆண்டாரை சரமாரியாக வெட்டி கழுத்தை அறுத்துத் துண்டித்து படுகொலை செய்தனர். இதனால், கிராமம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது உடனடியாக கரியாம்பட்டி, நடுப்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இரு வேறு சமூக இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளதால் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கிராமம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், இரு சமூகத்திற்கிடையே ஏற்கனவே மோதல் நிலவி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த கரியாம்பட்டி நடுப்பட்டியில் நேற்று நள்ளிரவு ஆண்டார் வயது 55 கூலி தொழிலாளி முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனை அடுத்து மர்ம நபர்களைக் கைது செய்யக்கோரி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் உறவினர்கள் மனு அளித்திருந்தனர். இதனை அடுத்து காலதாமதம் செய்வதாகக் கூறி உறவினர்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் நிலக்கோட்டை நான்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? - எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன? - Savukku Shankar Assault Allegation