சென்னை: சென்னை ஐஐடியின் 61-ஆவது பட்டமளிப்பு விழா, ஐஐடி வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமெரிக்கவை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் பிரையன் கே.கோபில்கா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் முனைவர் பட்டம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "சென்னை ஐஐடியில் முனைவர் பட்டம் பெறுவது பெருமையாக உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு பதிவு செய்தேன், அதன் பின்னர் இளம் விஞ்ஞானியாக இஸ்ரோவில் இணைந்து ஜிஎஸ்எல்வி மார்க் ராக்கெட் வடிவமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதால், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி பணிகளை தொடர முடியாமல் போனது, இதனால் தற்போது ஆராய்ச்சியை நிறைவு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்" என்றார்.
இந்த வயதிலும் எப்படி ஆராய்ச்சி?: எனக்கு மிகவும் பிடித்த துறை, அதோடு ஆர்வம் அதிகம் என்பதால் மகிழ்ச்சியோடு செய்தேன் என சோம்நாத் பதில் அளித்தார்.
ஆராய்ச்சி எதை பற்றியது?: ராக்கெட்டுகள் ஏவும்போது அதிக அதிர்வுகள் ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்தினால் தான் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட்டுகள் சரியாக வேலை செய்வதோடு, அதிக நாட்கள் பயன்படும் என்பதால் vibration isolators என்ற தலைப்பின் கீழ் ஆய்வு செய்து அதனை முதன் முதலாக பிஸ்எல்வி ராக்கெட்டுகளில் செயல்படுத்தியுள்ளேன்" என்று கூறினார்.
இஸ்ரோவின் அடுத்த திட்டம் என்ன? - என்.ஜி.எல்.வி(Next Generation Launch Vehicle) வடிவமைப்பு பணிகள் நடக்கிறது. புதிதாக விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சந்திரயானின் அடுத்த சீரிஸ் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.
ஆதித்யா எல்-1 செயல்பாடு எப்படி உள்ளது? - ஆதித்யா எல்-1, நிர்ணயிக்கப்பட்ட தளத்தில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது அடுத்த 5 வருடம் தொடர் கண்காணிப்பில் இருக்கும் என சோம்நாத் ஈடிவி பாரத்திற்கு தெரிவித்துள்ளார்.