திருவள்ளூர்: சந்திராயன் 3 கடந்த ஆண்டு நிலவில் நிலை நிறுத்தப்பட்டது. இதையொட்டி, ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அந்த வகையில், இந்திய விண்வெளி மையம் சார்பில் தேசிய விண்வெளி தினம் திருவள்ளூர் அருகே உள்ள பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
இதில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம், அறிவியல் கண்காட்சி, விண்வெளி தொடர்பான தகவல்கள், ரோபோட்டிக்ஸ் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனை உணவு கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சதிஷ்தவான் விண்வெளி மைய இயக்குனர் ராஜராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் எஸ்.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி, மார்க் 3 மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர். அதேபோல், இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இளம் தலைமுறையினரை எப்படி மாற்றுவது என்பதற்கான நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. உலகிலேயே நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரை இறக்கியது 4 நாடுகள் தான். அதில் இந்தியாவும் ஒன்று என்பது நமது விஞ்ஞானிகளால் தான் சாத்தியமானது" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன், "இந்த நிகழ்ச்சியின் மூலம் விண்வெளியால் என்னென்ன நன்மைகளை நாம் அடைகிறோம், நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு விண்வெளி எப்படி பயன்படுகிறது, விண்வெளி ஆராய்ச்சிகளை எப்படி படிப்பது உள்ளிட்ட தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
வரும் 2047ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மட்டுமின்றி நமது அனைவரது கனவாக இருக்கின்றது. இதற்காகத்தான் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும், பயிற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டின் நகலை கிழித்தெரிந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள்.. மதுரை மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு! - councillors protest against Budget