விருதுநகர்: பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நிகழ்வு ஒன்றில் பேசும்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுநகரில் நேற்று (செப்டம்பர் 22) மாவட்டச் செயலாளர் சந்திரன் தலைமையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கத்தின் 5ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து திருமாவளவன் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை மாநிலப் பிரதிநிதித்துவ பேரவையில் பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள். இந்த கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். அக்டோபர் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், இந்திய அரசுக்கும் சமகாலத்தில் முக்கியமான இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.
இந்திய ஒன்றிய அரசு மதுவிலக்கு தொடர்பான தேசிய கொள்கையை வரையறுத்து, தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசும் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதா என முதலில் பாஜகவினர் பதிலளிக்க வேண்டும். குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதற்கு பாஜக காரணம் இல்லை. நிதிஷ் குமார் தான் காரணம். அதில் அவர் உறுதியாக இருக்கிறார். இந்த மாநிலங்களைத் தவிர பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமலில் இல்லை. அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் மதுவால் பாதிக்கப்படுவது பெரும்பாலான இந்துக்கள் தான். இந்து சமூகத்தின் பாதுகாவலர் என கூறும் பாஜக இளம் தலைமுறை இந்து சமூகத்தினரை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்தாலும் அரசுக்கு, நெருடலை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினையை கூட்டணியில் இருந்து கொண்டே நாங்கள் கையில் எடுத்துள்ளதை பாஜக பாராட்ட வேண்டும். ஆனால், இதை அவர்கள் கேலி செய்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் நோக்கம் மக்கள் நலன் அல்ல; திமுக கூட்டணியைப் பிளவுபடுத்துவதே.
அனுரா குமார திசநாயக தமிழர்களுக்கு ஆதரவானவரா?
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் பாஜக ஆட்சியில் இருந்தும் தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்க பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத்தமிழர்கள் பிரச்சினையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மீனவர்கள் பிரச்சினையும், ஈழத்தமிழர் பிரச்சினையும் எப்படி இருந்ததோ அதேபோல தற்போதும் இருக்கிறது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது பாஜக அரசியல் செயல் திட்டங்களில் ஒன்று. இது மிகவும் ஆபத்தானது. குடியரசுத் தலைவரின் ஆட்சியை கொண்டுவர பாஜக நினைக்கிறது. எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும், 'ஒரு கட்சி, ஒரு ஆட்சி' என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர்.
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சே, பிரேமதாசா வாரிசுகளை இலங்கை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுரா குமார திசநாயகே தமிழர்களுக்கு ஆதரவானவர் என சொல்ல முடியாது. முற்போக்கு கருத்து கொண்டவர் என சொல்லப்படுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்," என்று திருமாவளவன் பேசியுள்ளார்.