கன்னியாகுமரி: இந்திய நாட்டிற்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடாக மாலத்தீவு இருந்து வந்தது. மாலத்தீவு நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சீன ஆதரவு கொண்ட ஆட்சியாளர்களின் காரணத்தால் மாலத்தீவு சீன நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டது. இந்திய நாட்டின் ராணுவத்தினரை திருப்பி அனுப்பியது தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திடீரென லட்சத்தீவு பகுதிக்கு பயணம் செய்தார்.
அவர் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வெகுவாக மாலத்தீவிற்கு செல்வதை குறைத்துக் கொண்டனர். லட்சத்தீவு மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்ல துவங்கினர். இதனால் மாலத்தீவு அரசாங்கம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தல் காலகட்டத்தில் தேர்தல் பரப்புரை முடிந்த பின்னர் ,
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு ஆன்மீக பயணமாக வந்து, கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டார். மூன்று நாட்கள் தியானத்தில் இருந்த அவர், ஜூன் 1ஆம் தேதி தனது தியானத்தை முடித்துக் கொண்டார்.
விவேகானந்தர் பாறை: சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்தபோது, 1892ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு வந்து, பகவதி அம்மன் தவம் செய்ததாக கூறப்படும் பாறையில் தவம் செய்ய விரும்பினார். வாவு துறை கடல் கரையில் இருந்து கடலுக்குள் குதித்து சுவாமி விவேகானந்தர் அலைகளுக்கு இடையே நீந்திச் சென்று அந்த பாறை மீது ஏறி 3 நாட்கள் தவம் செய்தார்.
அப்படி சுவாமி விவேகானந்தர் கடலின் நடுவே தியானம் செய்த பாறையில் தான் தற்போது நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அது கடலுக்குள் ஒரு பொக்கிஷமாக காட்சி அளித்து வருகிறது.
கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுவர மூன்று படகுகள் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சேவை இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், 1970ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 9 கோடிக்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்து உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த மூன்று வருடங்களில் மேலும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஆன்மீகப் பயணமாக வந்து தியானம் மேற்கொண்டார்.
இதனால் வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் 45 மணி நேர தியானம் நிறைவு! திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை!