தேனி : தேனி மாவட்டம், சின்னமனூரில் வசித்து வருபவர் அருண்குமார். இவர் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மேலும், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் "வணக்கம் டா மாப்பிள்ளை" என்று கூறி பிரபலமடைந்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், அருண்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர்கள் சிலர் அருண்குமார் வேலை செய்யும் வாட்டர் சர்வீஸ் நிலையத்துக்கு சென்று எப்படி எங்கள் தலைவர் குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம் எனக் கூறி தம்மை தாக்கியதாக அருண்குமார் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் BNS 191(2), 329(4), 296(b), 115, 351 (2) உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல் தகவல் அறிக்கையின் படி, "அருண்குமார் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பொதுவான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாகவும், அதில் கடந்த நவ 23ம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொல்.திருமாவளவன் தமிழ் கடவுள்களான முருகன் மற்றும் விநாயக பெருமானை கேலி செய்து கொச்சையாக பேசியதை பார்த்த அருண்குமார் தனது இன்ஸ்டாகிராமில் தொல் திருமாவளவனுக்கு பதிலளிக்கும் விதமாக அவருடைய பதிவிற்கு ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளதாக,” தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்; எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
மேலும், “அதன் விளைவாக கடந்த 25-ஆம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில் அருண்குமார் வழக்கமாக வேலை செய்துவரும் வாட்டர் சர்வீஸில் வேலை செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரிந்த பெயர், விலாசம் தெரியாத 10 நபர்கள், வேலை செய்யும் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அருண்குமாரிடம் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கும் போது யாரோ வீடியோ எடுப்பதை பார்த்த 5 நபர்கள் வெளியே சென்றதாகவும், மற்ற 5 நபர்கள் அருண்குமாரை மாறி, மாறி கையால் அடித்ததில் இடது கன்னத்தில் வீக்கக்காயமும், எதிரிகள் கையால் குத்தியதில் நெஞ்சில் ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த ஓனர் இருதரப்பினரையும் சத்தம் போட்டு உங்களுக்குரிய பிரச்சனையை காவல் நிலையத்தில் வைத்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி சத்தம் போட்டதாகவும்,” முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்பு அருண்குமாருக்கு வலி அதிகமாக இருந்ததால், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும், பின்பு அருண்குமாருக்கு அதிகமாக நெஞ்சில் வலி இருந்ததால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சேர்ந்து சிகிச்சையில் இருந்த அருண்குமாரிடம் புகார் வாக்குமூலம் பெற்று தொடரப்பட்ட வழக்காகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்