திருச்சி: தேர்தல் பத்திரத்துடன், தேர்தலைச் சந்திப்பவர்கள் தோற்பார்கள், என இன்று (ஏப்.14) திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி பேசியுள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்குத் திராவிடர் கழகம் சார்பில் தலைவர் கி.வீரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் 19 ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் இந்திய அரசியல் சட்டம் நீடிக்க வேண்டுமா? அல்லது, மீண்டும் மோடி ஆட்சி ஏற்பட்டு மனுதர்மம் அரசியல் சட்டத்தின் இடத்தில் வந்து குந்திக்கொள்ள வேண்டுமா? என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய சவாலை இந்த நாடு சந்திக்கிறது.
சமத்துவத்திற்கு, சுயமரியாதைக்கு இடமில்லாமல் மாநிலங்களையே அழிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு எதையெல்லாம் போற்றி பாதுகாக்கச் சொன்னார்களோ, அந்த சமூக நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் இவை எல்லாவற்றையும் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கும் மோடி ஆட்சி, மீண்டும் வரக்கூடாது என்ற அளவிலே இந்தியா கூட்டணியினர் ஒன்று கூடியிருக்கின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி வந்தால் அம்பேத்கரின் அடித்தட்டான அரசியல் சாசனம் பாதுகாக்கப்படும்.
இந்த ஆண்டு அம்பேத்கரின் பிறந்தநாளுக்குத் தனிச் சிறப்பு உண்டு, அவருடைய அரசியல் சட்டத்தின் அடி கட்டுமான ஜனநாயகத்தை ஒழிக்க வேண்டும் என்பவர்களுக்கும், சமத்துவம் வேண்டும் என சொல்கின்றவர்களுக்கும் இடையே தான் போராட்டம். எனவே அம்பேத்கருக்கு ஜீன்.05 ம் தேதி இந்திய நாடு, இந்தியா கூட்டணியினுடைய வெற்றியை வைத்து மாலை சூட்டும்.
பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் அறிக்கை வெளியிடு குறித்த கேள்விக்கு,"பாரதிய ஜனதா கட்சியுடைய தேர்தல் அறிக்கை மக்களுக்கு ஏற்கனவே தெரியும், ஏனென்றால் அது தேறாத அறிக்கை, எனவே எப்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும் கவலை இல்லை. அவர்கள் தேர்தல் அறிக்கை என்பது எழுதப்படாத ஒன்று, மதவெறி, ஜாதி வெறி, பதவி வெறி இவ்வளவு தான் இருக்கும்.
தற்போது தேர்தல் அறிக்கையில் வெளிச்சமாகத் தெரிவது, தேர்தல் பத்திரம் தான், பல்லாயிரக்கணக்கான ஊழல். பத்திரமான தேர்தல் வேண்டும் என சொல்லக்கூடியவர்கள் ஒரு அணியிலே இருக்கிறார்கள், தேர்தல் பத்திரத்தை வைத்து நடத்தக்கூடியவர்கள் இன்னொரு அணியில் இருக்கிறார்கள். எனவே, தேர்தல் பத்திரம் தோற்கும், பத்திரத் தேர்தல் வெற்றி பெரும்”, என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்த நாளில் 'சங்கல்ப் பத்ரா' பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் மோடி - BJP MANIFESTO