கோயம்புத்தூர்: பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் பங்குபெறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இப்போட்டிகள் கடந்த ஆக.9 ஆம் தேதி தொடங்கி நேற்று (ஆக.13) வரை ஐந்து நாட்கள் பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த போட்டிகள் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் அனுமதியுடனும், தமிழ்நாடு கூடைப்பந்து கழக குறியீட்டு எண்ணுடனும் நடைபெற்றது. இதில் ஏ – பிரிவில் சென்னை, வருமான வரித் துறை அணி, சென்னை - இந்தியன் வங்கி அணி, பெங்களூரு – பேங்க் ஆஃப் பரோடா அணி, மத்திய செயலக அணிகளும், பி – பிரிவில் இந்திய ராணுவ அணியும், இந்தியன் ரயில்வே அணியும், கேரளா மாநில மின்சார வாரிய அணியும், லயோலா கல்லூரி அணி உட்பட 8 அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப் போட்டி கடந்த 12ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில், சென்னை - இந்தியன் வங்கி அணியை எதிர்த்து இந்திய ராணுவ அணி விளையாடியது. அதில், இந்தியன் வங்கி அணி 71 - 66 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற சென்னை, இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பை வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பெற்ற இந்திய ராணுவம் அணிக்கு பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற இந்தியன் ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரமும், நான்காம் இடம் பெற்ற மத்திய செயலக அணிக்கு ரூ.25 ஆயிரமும் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர் விருது சென்னை - இந்தியன் வங்கி அணி வீரர் பிரணவ் பிரின்ஸ்க்கு ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் விவகாரம்; தீர்ப்பு 3வது முறையாக தள்ளி வைப்பு! - vinesh poghat case verdict