கோயம்புத்தூர்: இந்தியாவின் முதல் பன்னாட்டு விமானப் பயிற்சி, "தரங்க சக்தி 2024" என்ற பெயரில் இன்று (ஆகஸ்ட் 6) முதல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் சுமார் 30 நாடுகள் பங்கேற்கின்றன. மேலும் 10 நாடுகள் தங்களது போர் விமானங்களுடன் பயிற்சிக்கு வந்துள்ளன. இந்தப் பயிற்சி இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வெளிப்படுத்தி, பங்கேற்கும் நாடுகளின் ராணுவங்களுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல் கட்டமாக ஆகஸ்ட் 6 முதல் 14 வரை கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 14 வரை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்குபூரிலும், பன்னாட்டு வான்பயிற்சி நடைபெறுகிறது. இந்த முதற்கட்ட பயிற்சி சூலூர் விமானப்படைத்தளத்தில் இன்று துவங்கிய பயிற்சியில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதில் இந்தியா தனது சொந்த தயாரிப்பு விமானங்கள் மற்றும் உபகரணங்களான தேஜாஸ், ரபேல், மிராஜ் 2000, ஜாகுவார் மற்றும் எம்ஐஜ் 29 ஆகியவற்றை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் பயிற்சி, தரை பயிற்சி, பாதுகாப்பு கண்காட்சிகள், கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள், இந்த பன்னாட்டு வான் பயிற்சியில் இடம்பெற உள்ளன.
இந்த பயிற்சியை நடத்துவதன் மூலம், இந்தியா தனது வளர்ந்துவரும் பாதுகாப்பு திறன்களையும், பிராந்திய சக்தியாக தனது அந்தஸ்தையும் சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. சூலூர் விமானப்படைத்தளத்தில் எட்டு நாட்கள் கூட்டு போர் பயிற்சி நடைபெறுகிறது.
மேலும் இந்தியா, ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர், வீராங்கனைகள் அதிநவீன போர்விமானங்களுடன் பங்கேற்றுள்ளனர். இந்திய விமானப்படை சார்பில் தேஜஸ், சுகாய் உள்ளிட்ட பல அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்ற நாடுகளின் போர் விமானங்களுடன் போர் ஒத்திகை பயிற்சியில் கூட்டாக ஈடுபட உள்ளன.
இந்நிலையில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் இந்திய விமானப்படை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இன்று மாலை போர் விமானத்தில் 5 மணி நேரம் பயணித்து, கோவை வந்த ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸுக்கு, இந்திய வான் எல்லை பகுதியில் நுழைந்தது முதல் சூலூர் விமானப்படை தளம் வரும் வரை இருபுறங்களிலும் தேஜஸ் விமானங்கள் புடைசூழ வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் போர் விமானத்தில் இருந்து இறங்கிய இங்கோ கெர்ஹார்ட்ஸ்க்கு இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு பின்னர் அங்கு பேசிய ஜெர்மன் நாட்டின் விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ், “ 5 மணி நேரம் போர் விமானத்தை இயக்கி வந்துள்ளேன், இந்திய விமான படையுடன் இணைந்து முதல் முறையாக இத்தகைய கூட்டுப் போர் பயிற்சி கோவை சூலூர் விமானப்படை தளத்தில் மேற்கொள்வதில் மகிழ்ச்சி.
இதுவரை ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளில் இதுபோன்ற கூட்டு போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தற்போது இந்தியாவில் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளோம். எதிர்வரும் எட்டு நாட்களும் இந்த கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும் விமானப்படையில் தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும் உதவும்.
மேலும் இந்தோ பசிபிக் பகுதியில் சீனா அச்சுறுத்தல் உள்ளதால்தான் இந்த கூட்ட பயிற்சி நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு இதுபோன்ற பயிற்சி எந்த உலக நாடுகளுக்கும் எதிரானது அல்ல” என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி பேசுகையில், “இந்த போர் பயிற்சி இந்தியாவின் விமானப்படையின் பலத்தை எடுத்தக்காட்டவும், பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தவும், மிகவும் உதவும். இந்தியா, ஜெர்மனி என இருநாட்டு விமானப்படையிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருக்கிறது" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வங்கதேச பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு!