கோயம்புத்தூர்: இந்திய பாதுகாப்பு துறையின், முப்படைகளின் சாா்பில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து போர்ப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜெர்மன், இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் உடன் இந்திய விமான படையும் இணைந்து தரங் சக்தி 2024 என்ற விமான படையின் வான் பயிற்சி இன்று துவங்கியது.
30 நாடுகள் பங்கேற்பு: இந்தப் பயிற்சி கோவை சூலூா் விமான படை தளத்தில் இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரையில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த கூட்டு பயிற்சியில் ஜெர்மன், இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட சுமார் 30 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக, 10 நாடுகள் தங்களது போர் விமானங்களுடன் பயிற்சிக்கு வருகை புரிந்துள்ளன.
இரு கட்ட தரங் சக்தி பயிற்சி: இந்தப் பயிற்சியானது இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வெளிப்படுத்தி, வான் பயிற்சியில் பங்கேற்கும் நாடுகளின் ராணுவங்களுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இன்று முதல் வருகிற 14 ஆம் தேதி வரையில் கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 14 வரையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பன்னாட்டு வான் பயிற்சி தளத்திலும் நடைபெறுகிறது.
முதற்கட்ட வான் பயிற்சி சூலூர் விமானப்படைத்தளத்தில் இன்று துவங்கிய நிலையில், விமானப்படை தளத்தை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(United Arab Emirates) உட்பட 30 நாடுகள் இந்த வான் பயிற்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானங்கள்: இந்நிலையில், பயிற்சியின் இடையே இந்தியா தனது விமானங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்களை அதாவது, தேஜாஸ் (HAL Tejas), ரபேல் (Rafale), மிராஜ் 2000 (Dassault Mirage 2000), ஜாகுவார் மற்றும் மிக்-29 (MiG-29) ஆகியவற்றை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சிகள்: பறக்கும் பயிற்சி, தரை பயிற்சி, பாதுகாப்பு கண்காட்சிகள், கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் இந்த பன்னாட்டு வான் பயிற்சியில் இடம் பெற உள்ளன. இந்த பயிற்சி பங்கேற்கும் நாடுகள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சியை நடத்துவதன் மூலம், இந்தியா தனது வளர்ந்து வரும் பாதுகாப்பு திறன்களையும், பிராந்திய சக்தியாக தனது அந்தஸ்தையும் சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் முதல் முறையாக பன்னாட்டு கூட்டு வான் பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வங்கதேச பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு! - Bangladesh issue