சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகா, கேரளா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் இன்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து அது வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் 20ஆம் தேதி ஒடிசா கடற்கரையில் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மோசடி செய்த நிதி நிறுவனங்கள் தொடர்பான விசாரணை - பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விளக்கம்! - Madras High court