சென்னை: வரும் காலங்களில் பரவலாக மழை பெய்து வடகிழக்கு பருவமழை முழுமை அடையும் என்று வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
வடக்கிழக்கு பருவமழை குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திக்கு பேசிய வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த், '' தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுவிழந்த காரணத்தால், வட தமிழக மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கன மழை இருக்காது என்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசியவர்; '' வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுவிழந்த காரணத்தால், தமிழகத்தின் உட்புற மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாட்களில் மிதமான மழை பெய்யும்.
இதையும் படிங்க: 'அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை பதவி நீக்கம் செய்க'.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவத்தில் அதிமுக பாய்ச்சல்..!
வளிமண்டல சுழற்சி வலுவிழுந்த காரணத்தால், மேற்கிலிருந்து வரும் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், பிறகு தென் தமிழகத்தில் கன மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது'' எனவும் தெரிவித்தார்.
அத்துடன், '' கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஐந்து முதல் ஆறு சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகும் எனவும், வங்ககடல் பகுதியில் சுழற்சிகள் உருவாக கூடும் என்பதால் மழைப்பொழிவு தொடரும்'' எனவும் அவர் கூறினார்.
மேலும், ''தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்யாமல் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வரும் காலங்களில் பரவலாக மழை பெய்து வடகிழக்கு பருவமழை முழுமை அடையும். அடுத்த இரண்டு வாரங்களில், தமிழகத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்பு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாத இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு மழை தொடர அதிக வாய்ப்புள்ளது'' என ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்