விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜூன் 14) வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இத்தேர்தலில் போட்டியிட நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அப்போது, வேட்புமனுத் தாக்கல் செய்ய சில்லறைக் காசுகளை கொண்டு வந்த வேட்பாளர், வேட்புமனுத் தொகையையும் ஏடிஎம் கார்டு மூலமாகவே பெற வலியுறுத்தி வந்த வேட்பாளர் என நூதன முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள் குறித்து இச்செய்தியில் காணலாம்.
அக்னி ஆழ்வார்: தருமபுரி மாவட்டம், நாகமரை கிராமத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். இந்த இடைத்தேர்தலோடு இவர் 51வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஊழலை ஒழிக்க 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு, வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுகீடு வாங்கித்தர விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அக்னி ஆழ்வார் தெரிவித்துள்ளார்.
ராஜேந்திரன்: திருச்சி துறையூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து ஊழியரான ராஜேந்திரன், தமிழ்நாடு அரசும், போக்குவரத்து துறையும் டிஜிட்டல்மயத்திற்கு வர வேண்டும் என கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, டிஜிட்டல் கார்டு மூலம் பணம் செலுத்த அதிகாரிகள் ஏற்காமல் இறுதியாக பணமாக கொடுத்தால் மனுவை ஏற்போம் என கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த ராஜேந்திரன், டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்துவேன் என கூறிவிட்டு, டெபாசிட் தொகை கட்டாமல் மனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார்.
தேர்தல் மன்னன் பத்மராஜன்: தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சேலம் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர் 242வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். 1988ஆம் ஆண்டு முதல் மனுத்தாக்கல் செய்து வரும் பத்மராஜன், மனுத் தாக்கலுக்கு மட்டுமே இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், வெற்றியே காணாமல் தான் தோல்வியை மட்டுமே சந்தித்து வருவதால் மனம் தளராமல் மனுத்தாக்கல் செய்து வருவதாக பத்மராஜன் கூறியுள்ளார். மேலும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் 44வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பொன்முடி மீதான வழக்கு விசாரணை வருகிற ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு! - Ponmudi case