நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எளையாம்பாளையத்தில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மகளிருக்கான கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இக்கல்லூரியில் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குமாரமங்கலத்தில் உள்ள கல்லூரியின் தாளாளர் கருணாநிதியின் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 கார்களில் காலை முதலே 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரிக்கு உள்ளே சென்றவர்களிடமும், வெளியே வந்தவர்களிடம் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு செய்த புகாரின் பேரில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சோதனையில் முடிவில்தான் பணம் மற்றும் வரி ஏய்ப்பு செய்வதற்கான ஆவணங்கள் ஏதும் கைப்பற்றபட்டதா என்பது தெரியவரும் என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த கல்லூரியில் தான், நாமக்கல் மாவட்டத்துக்குட்பட்ட மக்களவைத் தொகுதிகளில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையும் இந்த கல்லூரியில்தான் நடைபெற உள்ளது. இந்த சூழலில் அங்கு வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உதவியாளரிடம் ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்! பணமோடி வழக்கில் ஜார்கண்ட் அமைச்சர் கைது!