சென்னை: நங்கநல்லூர், பாலாஜி நகர் மெயின் ரோட்டில் லிங்கம் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருபவர், சக்திவேல்(52). இவரது கடைக்கு முன்பாக சென்னை புறநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தனசேகர்(48) என்பவர் மது அருந்திவிட்டு சாலையில் விழுந்துள்ளார்.
இதனைக்கண்ட மளிகை கடைகாரர் மனிதாபிமான அடிப்படையில் அவரை தூக்கிவிட்டு உதவி செய்துள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர், மளிகை கடைக்காரரிடம் சென்று தனது செல்போனைக் கொடு என மிரட்டி வாக்குவாதம் செய்து திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், ஆத்திரமடைந்த அவர் தனது கட்சிகாரர்கள், தெரிந்தவர்கள் என 20-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து மளிகை கடைக்காரர் மற்றும் அவரது மகன்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதோடு, கடையை அடித்து நொறுக்கி கூல்டிரிங்ஸ் பாட்டில்கள், தண்ணீர் கேன்களை எடுத்து கடை மீது வீசி சாலையில் போட்டு உடைத்து அராஜகம் செய்துள்ளனர். இவை அக்கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இதனைக்கண்ட பொதுமக்கள் பழவந்தாங்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் விமல் என்பவரை, அதிமுக மாவட்ட செயலாளர் தனசேகர் மற்றும் அவரது மகன் வழக்கறிஞர் ஹரிஷ் ஆகியோர் போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, அவரை தாக்கிவிட்டு தப்பியோடினர்.
பின்னர், இது தொடர்பாக மளிகை கடைக்காரர் கொடுத்த புகாரின் பேரில், தனசேகர், 185வது வார்டு அதிமுக இளைஞரணி செயலாளர் ரவி(48), சதீஷ்(41), முருகேசன்(50), மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ்(43) ஆகிய ஐந்து பேரின் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது, தாக்கியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பின்னர், ஐந்து பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி ஐந்து பேரையும் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பின் காவல்துறையினர் பாதுகாப்போடு குற்றவாளிகளை சிறைக்கு அழைத்து செல்ல நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அதனைப் பதிவு செய்தனர்.
அப்போது வீடியோ எடுக்கக்கூடாது எனக் கூறி அதிமுகவைச் சேர்ந்த நபர்கள், அதிமுக மாவட்ட செயலாளரின் உறவினர்கள் ஆகியோர் பத்திரிகையாளர்களை மிரட்டினர். தொடர்ந்து அங்கு, தனியார் தொலைக்காட்சி நிருபர் முஸ்தபா என்பவரைத் தாக்க முற்பட்டதோடு கையில் இருந்த செல்போனைப் பறித்து கீழே வீசிவிட்டனர்.
அதேபோல, மற்றொரு தொலைக்காட்சி நிருபர் மொய்தீன் என்பவரின் செல்போனையும் பறித்தனர். காவல்துறையினர் முன்னிலையிலேயே அராஜத்தில் ஈடுபட்டு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மிரட்டல் விடுத்தனர். இச்சம்பவம் ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் ஹரிஷ்(24) என்பவருக்கு அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் ஹரிஷை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வலுக்கட்டாயமாக கைது - ஏஐகேகேஎம்எஸ் கண்டனம்