திருச்சி: எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் நடந்த கள்ளச் சாராய மரணங்களிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமிழக அரசு என்னும் இயந்திரம் செயலிழந்துள்ளது. இதை இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மூலம் புரிந்துக் கொள்ள முடிகிறது.அவ்வாறு இல்லை என்றால், கள்ளச்சாராய மரணத்திற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். ஒன்றிய அரசின் எல்லா நிறுவனங்களும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக தான் உள்ளது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறி உள்ளோம். அதை போல் இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடுபடி, வழக்கை சிபிஐ விசாரணைக்கு கேட்பதும் சரியானது.போதை கலாச்சாரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக எடுக்கப்பட வேண்டும். மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முடியாது என முதலமைச்சர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது. தமிழக அரசே தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். ல்லையென்றால் அங்குள்ள நிறுவனம் தொழிலாளர்களுக்கு ஒரு கோடி நிவாரண வழங்க வேண்டும்.
முதலமைச்சருக்கு கோரிக்கை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற சட்ட போராட்டம் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பில் 5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால் அதில் 65 ஆயிரம் காலி பணியிடங்கள் மட்டுமே நிரப்பபட்டுள்ளது. 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு யானைக்கு பசிக்கு சோளப்பொரி போன்றது. போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பபட வேண்டும். மேலும் சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது. அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தவறான நடவடிக்கை. சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு மதிப்பளித்திட வேண்டும்.
விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்க போவதாக நாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். தேர்தல் நேர்மையாக நடத்தப்படாது என்கிற காரணத்தால் நாங்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். நாடாளுமன்ற பொது தேர்தலிலும் தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக தான் இருந்தது” என்று நெல்லை முபாரக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை” - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்து!