தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்த அகஸ்டின் செல்வராஜ் மற்றும் திவ்யா தம்பதிக்கு கேடன்ஸ் மார்ஷியா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. சிறுவயதிலேயே படிப்பிலும், விளையாட்டிலும் குழந்தை மார்ஷியா காட்டிய ஆர்வத்தை கண்டு வியந்த அகஸ்டின், திவ்யா தம்பதி, குழந்தையை நடன பள்ளியில் சேர்த்து விட்டுள்ளனர்.
சிறுவயதிலேயே படிப்பிலும், விளையாட்டிலும் குழந்தை மார்ஷியா காட்டிய ஆர்வத்தை கண்டு வியந்த அகஸ்டின், திவ்யா தம்பதி, குழந்தையை நடன பள்ளியில் சேர்த்து விட்டுள்ளனர். குறுகிய காலத்தில் நடனமாடி அசத்திய மார்ஷியாவின் திறனை இதோடு நிறுத்தி விடக்கூடாது என எண்ணி, அவரை ஸ்கேட்டிங் வகுப்பிற்கு சேர்த்து விட்டுள்ளனர்.
3 வயதான குழந்தை ஸ்கேட்டிங் பலகையின் மீது நிற்குமா என்ற தயக்கத்துடன் இருந்த மார்ஷியாவின் பெற்றோருக்கு, ஸ்கேட்டிங் ஷூ அணிந்து நடந்து காட்டி ஆச்சரியப்பட வைத்துள்ளார் குழந்தை மார்ஷியா. குழந்தையின் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பார்த்த மார்ஷியாவின் பெற்றோர், குழந்தைக்கு அதிக ஊக்கம் அளித்து விளையாட்டுத் துறையில் உலக சாதனை புரிய வைக்க வேண்டும் என்ற நோக்கில் வீட்டிலும் பயிற்சி கொடுத்து வந்துள்ளனர்.
குழந்தையின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை, மூன்றே மாத கால பயிற்சியிலேயே ஸ்கேட்டிங் மூலம் 5 கி.மீ தூரத்தை கடந்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட வைத்துள்ளது. கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தேசிய அளவிலான துடுப்பு படகு போட்டி துவக்கம்!
3 மாத காலம் மட்டுமே பயிற்சி எடுத்திருந்த குழந்தை மார்ஷியா, சுரண்டை அருகே உள்ள இரட்டை குளம் பகுதியில் தொடங்கி சுரண்டை அண்ணா சிலை வரையிலான 5 கிலோமீட்டர் தூரத்தை 50 நிமிடத்தில் கடந்து உலக சாதனை படைத்தார். வழி நெடுகிலும் குழந்தையின் உறவினர்கள் ஆரவாரத்துடன் உற்சாக மூட்டினர். 5 கிலோமீட்டர் தூரத்தை 50 நிமிடத்தில் கடந்த குழந்தை மார்ஷியாவிற்கு யுனிக்கோ உலக சாதனைக்கான சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சுரண்டை நகர்மன்ற உறுப்பினர் வள்ளி முருகன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இது குறித்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு மார்ஷியாவின் தந்தை அகஸ்டின் செல்வராஜ் கூறுகையில், “மூன்று வயதில் எனது குழந்தை உலக சாதனை புரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மார்ஷியாவிற்கு இருந்த சுறுசுறுப்பும், உற்சாகமும் தான் அவளை உலக சாதனை புரிய வைத்துள்ளது.
அவளுக்கு சிறுவயதில் இருந்தே, அவருடைய தாயார் பல்வேறு கலைகளை அவருக்கு கற்றுக் கொடுத்து வந்தார். மார்ஷியா காலையில் 5 மணிக்கு எழுந்திருந்து ஸ்கேட்டிங் பயிற்சியை எடுத்து வந்தார். குழந்தையின் இந்த விடாமுயற்சியே உலக சாதனைக்கு காரணம்” என்றார். மூன்றரை வயது குழந்தை ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரிந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.