சிவகங்கை: முதல் முயற்சி தோல்வி என்பது இயல்புதான். விடாமுயற்சியுடன் எதிர்கொண்டால் எதிலும் வெற்றி கிடைக்கும் என்று நமக்கெல்லாம் ஊக்கமளிக்கிறார் ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து முதல் மருத்துவராகும் மாணவி லட்சுமி.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்தையா, சுதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சிறு வயதில் இருந்தே மருத்துவராகும் கனவை சுமந்து வந்த மூத்த மகள் லட்சுமி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படிக்க உள்ளார். இன்றும் பல பகுதிகளில் இருப்பது போல திருப்பத்தூர் அருகே உள்ள பல கிராமங்களிலும் பெண்கள் பள்ளிப்படிப்பை முடித்ததும், மேல் படிப்பிற்கு அனுமதியாமல் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், லட்சுமி பள்ளிப்படிப்பை முடித்ததும், பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் என உறவினர்கள் கூறி வந்த நிலையில், தனது வாழ்நாள் கனவை தந்தை, தாயிடம் கூறியதோடு தனது தாய்மாமா சுரேஷ் குமாரிடமும் கூறியுள்ளார் லட்சுமி. இதனைத் தொடர்ந்து மூவரும் லட்சுமியின் இலட்சியத்தை அடைய வழிவிட்டதோடு, மாணவிக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடுமையாக போராடி படித்த லட்சுமி, தான் முதல்முறையாக எழுதிய நீட் தேர்வில் 369 மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலையில், 354 என 15 மதிப்பெண் குறைவாக பெற்று மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத துரதிர்ஷ்ட நிலையில் இருந்துள்ளார். இதனால் அவரது தந்தை சற்று யோசிக்க, தாய் சுதா கண்ணீரோடு கணவரிடம் போராடி மகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை பெற்று தந்தார்.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய லட்சுமி 509 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலையில், 555 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க உள்ளார். தான் படிக்க வேண்டும் என எண்ணியபோது தனது குடும்பத்தில் யாரும் தமக்கு ஒத்துழைப்பு தரவில்லை என கண்ணீரோடு கூறிய தாய் சுதா, மகள் கனவுடன் தன்னுடைய கனவும் நிறைவேறியதாக அகம் மகிழ்ந்து லட்சுமிக்கு இனிப்புகளை ஊட்டி பாராட்டினார்.
ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து முதல் மருத்துவராக உள்ள மாணவி லட்சுமி கூறுகையில், "நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் மேல்படிப்பு வேண்டாம் என பெற்றோர்கள் கூறினர். ஆனால் நான் அடம்பிடித்து மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நீட் தேர்வு எழுதினேன். முதலில் சிறு மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறவில்லை.
அதைத் தொடர்ந்து நான் மீண்டும் முயற்சி செய்கிறேன்.என்னால் முடியும் என்று தந்தையிடம் கூறி, மீண்டும் முழுமுயற்சியுடன் படித்ததன் விளைவாக இம்முறை நீட் தேர்வில் வெற்றி பெற்றேன். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் எனக்கு சீட் கிடைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்முறை தோல்வியை தழுவிய போது சிறு மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மிகவும் வருத்தமாக இருந்தது. அதன்பின் கடின உழைப்புடன் படித்ததில் வெற்றி கிடைத்தது. ஒருமுறை தோற்றுவிட்டால், அதை எண்ணி மனம் நோகாமல், கடின உழைப்புடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறினார் சாதனை மாணவி லட்சுமி.
ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர உள்ள லட்சுமியின் முயற்சியை அறிந்து கிராம மக்கள் அனைவரும் அலரது இல்லத்திற்கு சென்று லட்சுமியை பாராட்டி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 75 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நெட்வொர்க் சேவை.. திருச்சி கண்ணூத்து கிராமத்தின் ஏக்கம் தீர்த்த பிஎஸ்என்எல்! - Kannuthu BSNL 4G Mobile Service