சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், புதிதாக எந்த காரணமும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்காததால், ஜாமீன் மனுவை ஜனவரி 12ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த உண்மைத் தொகைகளை திருத்தி பொய்யாக புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வங்கிப் பணவர்த்தனைகளையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாகவும், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் இருந்த தகவல்கள் திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை அமலாக்கத்துறை கணக்கில் கொள்ளவில்லை எனவும், ஆவணத்தில் உள்ள தேதிகளை அமலாக்கத்துறை மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜன.30) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், "அமலாக்கத்துறை தனது விசாரணையை முடித்து விட்டது.
150 நாட்களை கடந்து விட்ட நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜின் தம்பி தலைமறைவாக உள்ளார் என்பதற்காக, அமர்வு நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்தது தவறு. உச்சநீதிமன்றமும் உடல் நலக்குறைவுக்காக ஜாமீன் தர முடியாது என மட்டுமே கூறியுள்ளது. வேறு எந்த காரணங்களையும் கூறவில்லை.
அமைச்சராக உள்ளவரை நீக்க மாநில அரசு பரிந்துரை செய்யாமல், ஆளுநரால் தனிப்பட்ட முறையில் நீக்க முடியாது என உச்சநீதிமன்றமே தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இதையடுத்து, "அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவந்தால் என்ன நடக்கும்? என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும். அனைத்து தரப்பிலும் விசாரணை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்த நீதிபதி, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: "மகனாக நான் இருக்கிறேன்" - பூரணம் அம்மாளிடம் நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!