திருநெல்வேலி: தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு, நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தொடங்கி கொடைக்கானல், நீலகிரி, ஆனைமலை, சிறுவாணி அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் வசிக்கின்றன. இந்த நிலையில், வரையாடுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இதற்கான சிறப்பு நிதியாக ரூ.25 கோடி கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது போல், வரையாடுகள் கணக்கெடுப்பும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நெல்லை மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள் வசிக்கும் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணி நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது. நேற்று தொடங்கி நாளை (மே 1) வரை, அதாவது 3 நாட்கள் இந்த கணக்கெடுப்பை வனத்துறையினர் நடத்துகின்றனர்.
இந்நிலையில், வரையாடு கணக்கெடுப்பு பணிக்காக சிறப்பு பயிற்சி, வனச்சரகர் கல்யாணி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முண்டந்துறை வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. முண்டந்துறை வனச்சரகத்தில் அகத்தியர் மலை, அடுப்புக்கல் மொட்டை, செம்புஞ்சு முட்டை, ஐந்தலை பொதிகை ஆகிய பகுதிகளில் வரையாடுகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் காலடித்தடம் மற்றும் எச்சங்களை வைத்தும், நேரடியாக பார்ப்பதைக் கொண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "முதலமைச்சர் கொடைக்கானல் பயணம் குறித்து திமுகவினரே விமர்சனம்" - ஹெச்.ராஜா தகவல்! - Hraja Criticized Tn Cm Mk Stalin