ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் சூளை என்னும் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே அரசு மதுபான கடை செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 4ஆம் தேதி மழையின் காரணமாக மது அருந்த வந்த இளைஞர்கள் அருகில் உள்ள சந்திரசேகர் கடை முன்பு மது அருந்த முயற்சி செய்துள்ளனர்.
இதனை அறிந்த சந்திரசேகர் கடை முன் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அங்கு இருந்த சந்திரசேகர் கடையின் லாரி டிரைவர் ராமு, இளைஞர்களிடம் இதனை எடுத்து சொல்ல முயன்றதாக தெரிகிறது. ஆனால் வாக்கு வாதம் முற்றிய நிலையில் திடீரென இளைஞர்கள் அடிதடியில் இறங்கினர். அதில் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்த இளைஞர், ராமுவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து காயமடைந்த ராமு ஈரோடு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபிரகாஷ், வெங்கடேஷ், தமிழ்செல்வன், அரவிந்த் இளைஞர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் 4 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இளைஞர்கள் லாரி ஓட்டுனர் ராமுவை பீர்பாட்டிலால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிடிஓவிடம் புகார் கொடுத்த நபரை தரக்குறைவாக பேசிய ஊராட்சி மன்ற தலைவர்.. ஆடியோ வெளியீடு!