ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாத சுவாமி கோயில் ஆடிப்பெரும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக நடைபெறும். இதன் தொடக்கமாக ஆடிப்பெரும் தேர் திருவிழாவான இன்று 60 அடி உயரம் கொண்ட மூங்கில்களால் செய்யப்பட்ட தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அதன்பின் அலங்கரிக்கப்பட்ட காமாட்சியம்மன், பெருமாள் சாமி, குருநாதசாமி ஆகிய உற்சவர் சிலைகள் தேரில் கொண்டு வந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்பு ஓங்கோல் இன மாடுகள் மற்றும் நாட்டிய குதிரை நடனமாடி முன்னே செல்ல, குருநாதசாமி, பெருமாள் சாமி தேரை பக்தர்கள் தங்கள் தோள் மீது சுமந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள வனக் கோயிலுக்கு சுமந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து வனக்கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயில் திருவிழாவை ஒட்டி தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரைச் சந்தை நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் இருந்து காட்டியவார், மார்வார், போனி, நாட்டு ரக குதிரைகள் என ஐம்பது ஆயிரம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் தற்போது வந்துள்ளன.
இன்றிலிருந்து 4 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர். ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 700க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்திருவிழா குறித்து அவ்வூரைச் சேர்ந்த செந்தில் முருகன் கூறுகையில், “அந்தியூர் குருநாத சுவாமி கோயில் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. இதற்காக இரண்டாயிரம் மேற்பட்ட குதிரைகள் வருகை தந்துள்ளன. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நாட்டு ரக குதிரைகள் வந்துள்ளன. இது ஒரு பழமையான திருவிழா. குறிப்பாக இத்திருவிழா மன்னர்கள் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
மைசூரு மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி போர் படைக்காக இங்கு வந்து குதிரைகளை வாஙகி சென்றதாக வரலாறு உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வியக்க வைக்கும் தமிழரின் வானியல் அறிவு.. வெளிவரும் 3000 ஆண்டு கால வரலாறு..! - Kalayarkoil stone inscriptions