சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (புதன்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
மழை எச்சரிக்கை: இதன் காரணமாக இன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போல் நாளை (வியாழக்கிழமை) வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.20 முதல் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: அடுத்த 3 நாள்களுக்கு தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதையும் படிங்க: "தூத்துக்குடியில் பெய்த கனமழையால் 225 வீடுகள் சேதம்" - ஆட்சியர் இளம் பகவத் தகவல்!
வங்கக்கடல் பகுதிகள்: டிச.18 முதல் 22 வரை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: இன்று தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் நாளை(டிச.19) முதல் 22 வரை எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.