சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.25) உயிரிழந்தார்.
பிரபல பின்னணி பாடகி பவதாரிணி கடந்த 2000 ஆம் ஆண்டில் பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருது வாங்கியிருந்தார். மேலும் பிரண்ட்ஸ், தாமிரபரணி, காதலுக்கு மரியாதை, மங்காத்தா, கோவா, அனேகன் ஆகிய பல படங்களில் பாடியுள்ளார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவையாகும். குறிப்பாக அழகி படத்தில் இவர் பாடிய 'ஒளியிலே தெரிவது தேவதையா' என்ற பாடல் மாபெரும் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஷால், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் பவதாரணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இலங்கையிலிருந்து இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர், பாடகி பவதாரணியின் உடலுடன் இன்று மதியம் 1:30 மணி அளவில் புறப்பட்டு, 3:30 மணி அளவில் சென்னையை அடைவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாலை 5:30 மணி முதல் தி.நகர் முருகேசன் தெருவில் உள்ள இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு: அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல்!