சென்னை: சென்னை ஐஐடி பூமிக்கு அப்பால் உற்பத்திக்கான ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்ல வெலான் ஸ்பேஸ் (Vellon Space) என்ற இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது. பூமியின் சுற்றுவட்டப் பாதை நுண்ணீர்ப்பு விசை ஆராய்ச்சியில் இந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
வெலான் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆஸ்டெரிக்ஸ் லேப் (AsteriX Lab) எனப்படும் விண்வெளி ஆய்வகத்தின் மினியேச்சர் குறித்து புவி வட்டப்பாதையில் செயல்விளக்கத்தைக் காட்ட அந்நிறுவனத்திற்கு சென்னை ஐஐடி தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை வழங்கும். பூமிக்கு அப்பால் உற்பத்தி எனப்படும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் வெலான் ஸ்பேஸ் நிறுவனத்தின் செயல்விளக்கப் பணியில் சோதனை முயற்சி வாடிக்கையாளராகச் செயல்படுகிறது.
உயிரியல் பரிசோதனைகளை நடத்துவதற்கான விண்வெளித் தகுதி குறிப்பாகக் குறைந்த புவி நுண்ணீர்ப்பு விசையில் நீண்டநேர செல் வளர்ப்பு குறித்து ஆஸ்டரிக்ஸ் ஆய்வகம் செயல்விளக்கப் பணிகளை மேற்கொள்ளும். இந்த செயல்விளக்கம் விண்வெளியில் 2025-ம் ஆண்டில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியரும், எக்ஸ்டெம்-ஐஐடி மெட்ராஸ் ஒருங்கிணைப்பாளருமான சத்யன் சுப்பையா கூறும்போது, "விண்வெளியில் உயிரி உற்பத்திக்காக நடைபெறும் இந்த செயல் விளக்கமானது செல் வளர்ப்பு மற்றும் மருந்து தயாரிப்பில் திருப்புமுனையை ஏற்படுத்தும். மருந்து தயாரிப்புத் துறையும், மனித ஆரோக்கியமும் மேம்பட இது வழிவகுக்கும்" எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சுரேஷ்குமார் கூறும்போது, "பூமியில் பயன்படுத்தவோ அல்லது விண்வெளிப் பயணங்களின்போது பயன்படுத்தவோ தேவையான சிறந்த தயாரிப்புகளுக்கு அவர்கள் பங்களிப்பை வழங்குகின்றனர்.
இந்த ஒத்துழைப்பின் வாயிலாக உயிரியல் அமைப்புகளில் நுண்ணீர்ப்பு விசையின் விளைவுகளைப் புரிந்து கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும், மருந்து உற்பத்தி செயல்முறைகளில் புதுமைகளையும், விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் வணிக வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்" எனக் குறிப்பிட்டார்.
வரும் காலங்களில் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும்போது விண்வெளியிலும், பூமிக்குத் திரும்பிய பின்னரும் பயன்படுத்தும் வகையில், விண்வெளி உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தல், பாகங்களை இணைத்தல் போன்ற தொழில்நுட்பங்கள் அவசியமாகின்றன.
இதையும் படிங்க: ஆளுநரின் விமர்சனத்திற்குப் பதிலடி; கால்டுவெல் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் நெல்லையில் வெளியீடு!