சென்னை: சென்னை ஐஐடியில் உலகளாவிய எதிர்பார்ப்புகளைச் செயல்படுத்தும் நோக்கில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளது. இக்கல்வி நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப சுற்றுச்சூழலிலிருந்து வெளிவரும் ஸ்டார்ட் அப்களுக்கு உலகளவிலான சந்தைகள், முதலீடுகள், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவி, உத்தி சார் பல்கலைக்கழக ஒத்துழைப்புகள் மற்றும் தொழில் கூட்டாண்மை மூலம் முதுகலைக் கல்வி மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளைத் தரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு இது உந்துசக்தியாக இருக்கும்.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான திருமலை மாதவ் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தொலை நோக்குத் திட்டங்கள் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, “இந்தியாவின் விஸ்வகுரு லட்சியத்தில் இணைந்து செயல்படவும், உலகளவிலான ஸ்டார்ட் அப்களை உருவாக்கவும், ஐஐடி எம்.ஆர்.எஃப் ஓர் உத்தி சார் முயற்சியாகும். தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாராயணன், இந்த முன்முயற்சிக்கு தலைமை நிர்வாகியாக இருந்து வழிநடத்துவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டார்.
அறக்கட்டளையின் முக்கிய செயல்பாடுகளாக, காப்புரிமைகள், தொழில்நுட்பங்களை வணிகப்படுத்த தயார் நிலையில் வைத்திருத்தல், ஐஐடி மெட்ராஸ் ஆசிரிய நிறுவனர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்ட ஸ்டார்ட் அப்கள், சந்தை ஆய்வுகள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் (உதாரணமாக பசுமை வளர்ச்சி), ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழலிலிருந்து ஸ்டார்ட் அப்களுக்கு உலகளாவிய அணுகுமுறையை ஏற்படுத்துதல், புதிய சந்தைகள், மூலதனம், தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துதல், முன்னாள் மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய தொழில்நுட்பங்களைக் கிடைக்கச் செய்தல், உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் தொழில் கூட்டு முயற்சியின் மூலம் சர்வதேச கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
ஐஐடி எம்.ஆர்.எஃப் மூலம் செயல்படுத்த உள்ள திட்டங்களை எடுத்துக் கூறிய சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னூலா கூறும்போது, "சென்னை ஐஐடிக்கு மட்டுமின்றி ஐஐடி எம்.ஆர்.எஃப் நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும் என நம்புகிறோம். ஒரு கல்வி நிறுவனம் தனது கண்டுபிடிப்புகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கான மாதிரியை நிரூபித்திருப்பது இதன் சிறப்பம்சமாகும் எனத் தெரிவித்தார்.
தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாதவ் நாராயணன் கடந்த 37 ஆண்டுக் கால அனுபவம் வாய்ந்தவர். இன்டெல், எச்பி, டெல், சாம்சங், எப்சன் உள்ளிட்ட உலகளாவிய தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்களுக்கான உத்திகள், கட்டமைத்தல், மாற்றத்தை ஏற்படுத்துதல், வணிகத்தை உயர்த்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ரெடிங்டன் குழுமத்தின் நிறுவன உறுப்பினர்கள், தயாரிப்பாளர்களில் ஒருவர். WEF போன்ற உலகளாவிய மன்றங்களைத் தவிர, MEA, APAC பிராந்தியங்களில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகளில் தொடர்புடைய அரசாங்கங்களுடன் நீண்டகால உறவுகளை வலுப்படுத்தியுள்ளார்.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முன்னோடியாகத் திகழும் சென்னை ஐஐடி அமெரிக்காவில் 161 காப்புரிமைகள் உள்படச் சர்வதேசச் சந்தைகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 10,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளை வகித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமான நிறுவனங்களையும், ஸ்டார்ட் அப்களையும் உருவாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: "ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க சீனா, வடகொரியா திட்டம்" - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை! - Lok Sabha Election 2024