சென்னை: இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT-Madras) மற்றும் டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஃபரிதாபாத் (Translational Health Science and Technology Institute – THSTI Faridabad) இணைந்து 'பிறப்பு விளைவுகளுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி பல்துறைக் குழு - டிபிடி இந்தியா முன்முயற்சித் திட்டத்தின்' (Interdisciplinary Group for Advanced Research on Birth Outcomes – DBT India Initiative - GARBH-Ini) கீழ் இரண்டாம், மூன்றாம் மாதக்காலங்களில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவின் வயதைத் துல்லியமாக நிர்ணயிக்க முதன்முறையாக இந்திய மக்களுக்கான பிரத்தியேகச் செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளன.
கர்ப்பிணிகளைச் சிறந்த முறையில் கவனித்துக் கொள்ளவும், பிரசவத் தேதிகளைச் சரியாக நிர்ணயிப்பதற்கும் துல்லியமான 'கர்ப்பகால வயது' (Gestational Age - GA) அவசியமாகிறது. அதனடிப்படையில் வடிவமைக்கப்பட்டதே இந்த 'கர்ப்பிணி-ஜிஏ' என்றழைக்கப்படும் நவீனக் கர்ப்பகால வயது மதிப்பீட்டு மாதிரி.
ஜிஏ மாதிரியின் நன்மைகள்: கருவின் வயது (கர்ப்பகால வயது அல்லது ஜிஏ) மேற்கத்திய மக்களுக்காக உருவாக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி தற்போது தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இந்திய மக்களில் கருவின் வளர்ச்சியில் மாறுபாடுகள் இருக்கும் பட்சத்தில், கர்ப்பத்தின் கடைசி நாட்களில் கணக்கீடுகளைப் பயன்படுத்தும்போது தவறாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஐஐடி மெட்ராஸ் - THSTI ஃபரிதாபாத்துடன் இணைந்து கரு வயதின் காலத்தைத் துல்லியமாகக் கணக்கிடப் புதுத் தொழில்நுட்பத்தை அறிவித்துள்ளது.
- புதிதாக உருவாக்கப்பட்ட ‘கர்ப்பிணி-ஜிஏ2’ இந்திய மக்களுக்கான கருவின் வயதைத் துல்லியமாக மதிப்பிடுவதுடன், ஏறத்தாழ மூன்று மடங்கு பிழைகளைக் குறைக்கிறது.
- மகப்பேறு மருத்துவர்கள், சிசு பராமரிப்பு மருத்துவர்கள் ஜிஏ மாதிரியைப் பயன்படுத்தி குழந்தைப் பராமரிப்பை மேம்படுத்தலாம். இதனால், இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதங்களைக் குறைக்க முடியும்.
ஜிஏ மாதிரியின் உருவாக்கம்: கர்ப்பத்தின் தொடக்கத்தில் ‘அல்ட்ராசவுண்ட் டேட்டிங்’(Ultrasound dating) என்பது ஜிஏ-வைத் தீர்மானிக்கும் தரநிலையாகும். ஆயினும் மேற்கத்திய தரவுகளுடன் உருவாக்கப்பட்ட நடைமுறைகளின் டேட்டிங் குறிப்பாக இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் கரு வளர்ச்சியின் மாறுபாடுகள் காரணமாக இந்திய மக்கள் இடையே துல்லியத்தன்மை குறைந்து காணப்படும்.
கர்ப்பிணி ஜிஏ2-வை உருவாக்க மரபணு அடிப்படையிலான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி உள்ளனர். கர்ப்பத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் பயன்படுத்தப்பட்டபோது, தற்போதைய ஹேட்லாக், அண்மைக்கால இண்டர்குரோத்-21 போன்ற மாதிரிகளைவிடத் துல்லியமாகக் காணப்பட்டது. கர்ப்பிணி ஜிஏ2 மாதிரியானது ஹாட்லாக்குடன் ஒப்பிடும்போது ஜிஏ மதிப்பீட்டின் சராசரிப் பிழைகளைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு குறைவாக இருந்தது.
வழக்கமாக அளவிடப்படும் கருவின் அல்ட்ராசவுண்ட் அளவுருக்களே கர்ப்பிணி ஜிஏ2-வுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஹரியானா மாநிலம் குருகிராம் சிவில் மருத்துவமனையில் ஆவணப்படுத்தப்பட்ட ‘கர்ப்பிணி’ தரவுகள் தென்னிந்தியாவைச் சேர்ந்த தனியார் குழுவால் சரிபார்க்கப்பட்டது. சிறந்த துல்லியத்துடன் இந்திய மக்களுக்குக் குறிப்பிட்ட ஜிஏ நடைமுறைகளைப் பயன்படுத்துவது கர்ப்பப் பராமரிப்பை மேம்படுத்துவதுடன், சிறந்த விளைவுகளுக்கும் வழிவகுப்பதாக அமையும். துல்லியமான தரவுகள் காரணமாகக் கர்ப்ப விளைவுகளுக்கான தொற்றுநோயியல் மதிப்பீடுகளின் துல்லியத்தையும் மேம்படுத்த உதவும்.
அகில இந்திய அளவில் சிறப்புக் குழுவினர் இதனைச் சரிபார்த்ததும், கர்ப்பிணி ஜிஏ-2 நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். மகப்பேறியல், சிசு பராமரிப்பு மருத்துவர்களின் பராமரிப்புப் பணிகளை மேம்படுத்துவதுடன், இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதத்தையும் குறைக்க முடியும். குருகிராமில் உள்ள குருகிராம் சிவில் மருத்துவமனை, டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனை, வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, புதுச்சேரியில் உள்ள மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கர்ப்பிணி திட்டம் என்பது இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறையின் (DBT) முதன்மைத் திட்டங்களில் ஒன்றாகும். ஜிஏ மாதிரி உருவாக்க ஆராய்ச்சிக்கு இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் ‘கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா’ திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டது. ஐஐடி மெட்ராஸ்-ன் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ராபர்ட் பாஷ் மையம் (RBCDSAI), ஒருங்கிணைந்த உயிரியல் மற்றும் சிஸ்டம்ஸ் மருத்துவ மையம் (IBSE) ஆகியவற்றால் இத்திட்டத்திற்கென கூடுதல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜிஏ மாதிரியின் திட்ட மேலாளர்கள்: இதற்கான ஆராய்ச்சியை ஐஐடி மெட்ராஸ் உயிரித் தொழில்நுட்பத் துறையின் பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளி இணைப்பேராசிரியர் டாக்டர் ஹிமான்சு சின்ஹா, கர்ப்பிணி திட்ட முதன்மை ஆய்வாளரும், திஷ்டி-யின் (THSTI) பேராசிரியருமான டாக்டர் ஷின்ஜினி பட்நாகர் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். இது குறித்து சர்வதேச மதிப்பாய்வு இதழான லான்செட் ரீஜனல் ஹெல்த் சவுத்ஈஸ்ட் ஆசியா-வில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பிரிக்-திஷ்டி (BRIC-THSTI) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக் கவுன்சிலின் (BRIC) கல்வி நிறுவனமாகும். கடுமையான மருத்துவ ஆராய்ச்சித் திறனை உருவாக்குவதன் மூலமும், கண்டுபிடிப்புகளை ஆய்வகத்திலிருந்து நோயாளிகளுக்கு உதவும் விதமாக மாற்றுவதன் மூலமும் அடிப்படைக் கண்டுபிடிப்புகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான ஊக்கமாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத்துறை (DBT) செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே கூறுகையில், "கர்ப்பிணி (GARBH-Ini) என்பது உயிரித் தொழில்நுட்பத் துறையின் முதன்மையான திட்டமாகும். கர்ப்பகால வயதை மதிப்பிடுவதற்கான மக்கள் தொகை சார்ந்த மாதிரிகளை உருவாக்குவது பாராட்டத்தக்கது. இதுபோன்ற மாதிரிகள் நாடு முழுவதும் மதிப்பிடப்பட்டு வருகின்றன" என்றார்.
அதைத்தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் ஒருங்கிணைந்த உயிரியல் மற்றும் சிஸ்டம்ஸ் மெடிசின் மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஆராய்ச்சிக்கான தரவு அறிவியல் பணியை வழிநடத்தியவருமான டாக்டர் ஹிமான்சு சின்ஹா கூறுகையில், "இந்தியாவில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அடிமட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும் உள்ள சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஐஐடி மெட்ராஸ் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.
எங்களது மருத்துவக் கூட்டாளியான 'திஷ்டி'யுடன் இணைந்து சாதகமற்ற பிறப்பு விளைவுகளைக் கணிக்கும் கருவிகளை உருவாக்குவதற்காக, மேம்பட்ட தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அல்லது இயந்திர மொழி நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். மேற்கத்திய மக்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மாதிரிகளுக்குப் பதிலாகக் கணிசமான அளவில் சிறப்பாகச் செயல்படும் துல்லியமான ஜிஏ மாதிரிகளை உருவாக்குவதே இதன் முதல் நோக்கமாகும்" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, கர்ப்பிணி திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், மாற்றத்திற்கான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்(THSTI) பேராசிரியருமான டாக்டர் ஷிஞ்சினி பட்நாகர் கூறியதாவது, "ஜிஏ துல்லியத்தை மேம்படுத்துவதும் கர்ப்பத்தின் பாதகமான விளைவுகளைக் குறைப்பதும் கர்ப்பிணி-யின் பரந்த இலக்குகளில் முக்கிய அங்கமாகும். அதிநவீனத் தரவு அறிவியல் கருவிகளின் பயன்பாடு மட்டும் போதாது.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மருத்துவத் துறையில் உறுதியான பலன்களைக் கிடைக்கச் செய்வது, மருத்துவர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகளுக்கு இடையிலான இருபக்க ஒத்துழைப்பில்தான் உள்ளது. இதுபோன்ற கூட்டுறவால் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்வுகள் சிறப்பாகவும், மருத்துவ ரீதியாகப் பொருத்தமானதாகவும் விளங்குவதுடன் சுகாதாரப் பணிகளில் தடையின்றி ஒருங்கிணைப்பதையும் உறுதி செய்ய முடியும். இத்தகைய அணுகுமுறைக்கு இந்த ஆய்வு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது" எனத் தெரிவித்தார்.