சென்னை: சென்னை ஐஐடி இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 155 மிமீ ஸ்மார்ட் வெடிமருந்துகளை (155 mm Smart Ammunition) உருவாக்க பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இலக்கை எட்ட இம்முயற்சி உதவிகரமாக இருக்கும். 155 மிமீ வெடிமருந்துகளின் துல்லியத்தை அதிகரித்து பிழை ஏற்படும் சுற்றளவை (CEP) 10 மீட்டர் தூரத்திற்குள் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். தற்போது இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ள வெடிமருந்துகளின் பிழை ஏற்படும் சுற்றளவு 500 மீட்டராக இருந்து வருகிறது.
தாக்கத்தை ஏற்படுத்தும் மையப்புள்ளியில் சேதத்தை அதிகரிப்பதும் இதன் மற்றொரு முக்கிய இலக்காகும். இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் ராணுவம், கடற்படை, விமானப்படை, துணை ராணுவப்படை வீரர்களுக்குத் தேவைப்படும் வெவ்வேறு விதமான வெடிமருந்துகள், வெடிபொருட்களைத் தயாரித்து வரும் இந்தியாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாகும். தயாரிப்பு, ஆராய்ச்சி சோதனை, மேம்பாடு, வணிகப்படுத்துதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு இந்தியாவில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
சென்னை ஐஐடியின் வான்வெளிப் பொறியியல் (Aerospace Engineering) துறையின் பேராசிரியர் ராஜேஷ் குழுவினருடன் இரண்டாண்டு காலத்தில் ஸ்மார்ட் வெடிமருந்துகளை உருவாக்குவதற்கான பணியில் ஈடுபட உள்ளார். இது குறித்து மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநரான ரவி காந்த் கூறும்போது, "உலகத்தரம் வாய்ந்த வெடிமருந்துகளை உருவாக்க சென்னை ஐஐடியுடன் கைகோர்ப்பது உற்சாகம் அளிக்கிறது. நாடு 'ஆத்மநிர்பர் பாரத்' இலக்கை
அடைவதில் இந்த முயற்சி பெரும் பாய்ச்சலை ஏற்படுத்துவதாக இருக்கும்.
உயர்தர வெடிமருந்து தயாரிப்பில் எம்ஐஎல் நிறுவனத்தின் பலமும், வழிகாட்டும் அமைப்பை மேம்படுத்துவதில் சென்னை ஐஐடியின் திறமையும் இணைந்து, சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன வெடிமருந்துத் தயாரிப்பில் எம்ஐஎல் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் என்பது உறுதி எனத் தெரிவித்தார். சென்னை ஐஐடி விண்வெளிப் பொறியியல் துறையின் பேராசிரியர் ராஜேஷ் கூறுகையில், "சிறப்பு நோக்கத்துடன் தயாரிக்கப்படும் வழிகாட்டுஅமைப்பு, வழிசெலுத்தும் அமைப்பு, கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இந்த வெடிமருந்தில் தனிமைப்படுத்தும் உத்திகள், கனார்டு ஆக்சுவேஷன் சிஸ்டம், ஃபுஸ், ஷெல் பாடி, வார்ஹெட் போன்ற அமைப்புகளும் இடம்பெறும்.
மினியேச்சர் செய்யப்பட்ட மின்னணு, சென்சார் மற்றும் மெக்கானிக்கல் கட்டமைப்புகள் போன்றவையும் இதில் இருக்கும். திட்டமிடப்பட்டுள்ள ஸ்மார்ட் புராஜக்டைல் இந்திய பிராந்திய வழிகாட்டும் செயற்கைக்கோள் அமைப்பில் (IRNSS) ல் வழிகாட்டலுக்காக பயன்படுத்தப்படும். வெளிநாட்டு அரசுகளின் செயற்கைக்கோள் அமைப்புகளின்றி சுதந்திரமாக செயல்பட முடியும் என தெரிவித்தார். பீரங்கி அமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யாமலேயே 39 மற்றும் 45 காலிபர்- 155 மிமீ பீரங்கிகளில் ஸ்மார்ட் வெடிமருந்துகளை செலுத்த முடியும்.
அதிகபட்ச வரம்பு 38 கி.மீ., குறைந்தபட்ச வரம்பு 8 கி.மீ-ல் வெடிப்புப் புள்ளி, வெடிப்பின் உயரம், தாமதமான வெடிப்பு என 3 விதமான பியூஸ் செயல்பாடுகள் கொண்டது. இந்திய பிராந்திய வழிசெலுத்தும் செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) ஜிபிஎஸ் காப்புப்பிரதி, நெவிக் என்பது முதன்மையான வழிகாட்டும் அமைப்பாகும். வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகளை எந்தவொரு வெளிநாட்டு நிறுவன ஈடுபாடுமின்றி முற்றிலும் சுதந்திரமானதாக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இயக்கத்தில் இமயம் தொடும் பழங்குடியின பள்ளி மாணவர்கள்! அண்ணா பல்கலைக்கழக குறும்பட விழாவிற்கு தேர்வான மாணவர்களின் படைப்பு!